

விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் முகமது இப்ராஹீம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.எம்.அமீர்அப்பாஸ், தமுமுக மாநில செயலாளர் முஸ்தாக்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில வர்த்தக அணி பொருளாளர் அப்துல்ஹக்கீம், மாவட்டத் தலைவர்கள் பசல்முகமது, சையத் உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச் சியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் எல்லாம் அரேபியாவில் இருந்துவந்தவர்கள் இல்லை. அரேபியாவிற்கு பல பேர் போயிருக்கவே மாட்டார்கள். இங்கிருக்கும் முஸ்லிம்களின் முன்னோர்கள் சனாதன கொள்கை, இந்து மதத்தில் இருக்கின்ற சாதிய வேறுபாடு காரணமாக இஸ்லாமியர்களாக, கிறிஸ்தவர்களாக மதம் மாறி இருக்கின்றார்கள். மற்றபடி நாமெல்லாம் ஒன்றுதான்.
பாஜக ஆட்சியில் மத வெறியை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம்தேட நினைக்கின்றனர். கர்நாடகமாநிலத்தில் பாஜக ஆட்சி இருக்கின்றபோது இஸ்லாமியர்களுக்கு கொடுத்திருக்கின்ற நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளனர். உச்சநீதிமன்றம் இதையெல்லாம் நிறுத்தக்கூடாது, கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.