Published : 03 Sep 2017 12:53 PM
Last Updated : 03 Sep 2017 12:53 PM

ஈரோட்டில் 24 ஆண்டுகளாக போலீஸ் காவலில் இருக்கும் எம்ஜிஆர் சிலை

தமிழக அரசின் சார்பில் ஈரோட்டில் வரும் 6-ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் களை கட்டியுள்ளது. அதே நேரத்தில் எம்ஜிஆர் சிலையையொட்டிய அரசியலும் சூடுபிடித்துள்ளது.

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பெரியார், அண்ணா சிலைகள் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரூ .40 லட்சம் செலவில் பீடம் மற்றும் புதிய சிலைகள் நிறுவப்பட்டு, அதனை இரு நாட்களுக்கு முன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் அந்த சிலைகளின் அருகே நேற்று காலை முதல் எம்ஜிஆரின் முழு உருவச்சிலை திடீர் என அமைக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் அமைக்கப்பட்ட பீடத்தில் எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கத்திடம் பேசியபோது, ‘பன்னீர் செல்வம் பூங்காவில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு அருகே எம்ஜிஆர் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டு, ரூ.8 லட்சம் செலவில் சென்னையில் சிலை தயாரிக்கப்பட்டது. தற்போது சிலை பீடத்தில் பொருத்தப்பட்டு இருந்தாலும், திறப்பு விழா நடத்தப்படவில்லை. 6-ம் தேதி ஈரோடு வரும் தமிழக முதல்வர் நேரம் ஒதுக்கினால், அன்று சிலை திறப்பு விழா நடைபெறும்’ என்றார்.

திமுக அமைத்த பீடத்தில் எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘பெரியார், அண்ணா சிலைகள் நிறுவப்பட்டவுடன் அப்பகுதி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.மேலும், எங்கள் அனுமதியுடன் தான் எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

‘காவலில்’ எம்ஜிஆர் சிலை

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு சூரம்பட்டி காவல்நிலையத்தில் 24 ஆண்டுகளாக எம்ஜிஆர் சிலை ஒன்று ‘காவலில்’ இருந்து வருகிறது. கடந்த 1992-93-ம் ஆண்டில் திருநாவுக்கரசரால் தொடங்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுக சார்பில், அதன் மாவட்டச் செயலாளர் வேங்கை ராஜேந்திரன், கொல்லம்பாளையம் பகுதியில் முழு உருவ எம்ஜிஆர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்தார். அப்போது (அதிமுக ஆட்சி) காவல்துறை சிலை நிறுவ அனுமதி மறுத்து, வழக்கு தொடர்ந்தது. அத்துடன், முழு உருவ எம்ஜிஆர் வெண்கலச் சிலையை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றது. சிலையை மீட்க தேவையான சட்ட நடைமுறைகள், இதுவரை முடித்து வைக்கப்படாததால், கடந்த 24 ஆண்டுகளாக எம்ஜிஆர் சிலை, ‘போலீஸ் காவலில்’ இருந்து வருகிறது.

இந்த சிலையை அமைக்க ஏற்பாடு செய்த வேங்கை ராஜேந்திரன் தற்போது அதிமுக (அம்மா) எம்ஜிஆர் மன்ற மாநகர் மாவட்ட இணைச்செயலாளராக உள்ளார். அவரிடம் பேசியபோது, ‘ஈரோட்டில் எம்ஜிஆருக்கு சிலை இல்லை என்பதால், சிலை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போலீஸார் அனுமதி மறுத்து சிலையை பறிமுதல் செய்தனர். சிலை வைக்க முயற்சித்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கில் நான் விடுவிக்கப்பட்டாலும், வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி,அரசு வழக்கறிஞர் நடவடிக்கை எடுத்தால் சிறைபிடிக்கப்பட்ட சிலையை வெளியே கொண்டு வரமுடியும், என்றார்.

எம்ஜிஆர் சிலையை காவல்துறை பறிமுதல் செய்த நிலையில், சில நாட்கள் இடைவெளியில் அரசு மருத்துவமனை அருகே எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தற்போது அப்பகுதியில் மேம்பாலம் கட்டப்படவுள்ளதால், அந்த சிலையும் அகற்றப்பட்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x