Published : 17 Sep 2017 09:33 AM
Last Updated : 17 Sep 2017 09:33 AM

திருநெல்வேலி அருகே கோர விபத்து: ஆந்திர சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 5 பேர் பலி

ஆந்திராவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 5 பேர், திருநெல்வேலி அருகே லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி மற்றும் அதன் அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த 47 பேர், சுற்றுலாப் பேருந்தில் தமிழகம் வந்தனர். கடந்த 14-ம் தேதி தெனாலியில் இருந்து புறப்பட்ட அவர்கள், காளஹஸ்தி, பழனி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு, நேற்று அதிகாலையில் கன்னியாகுமரிக்கு சென்றுகொண்டிருந்தனர்.

அதிகாலை சுமார் 5 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் நான்குவழிச் சாலையில் உள்ள ஐஆர்டி பாலிடெக்னிக் அருகே வந்தபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலையோரம் பேருந்தை நிறுத்தியுள்ளனர். பேருந்தில் இருந்த சிலர் கீழே இறங்கி நின்றிருந்தனர்.

அப்போது, அதே வழியாக சிமென்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி வேகமாக வந்து, பேருந்தின் பின்னால் நின்றிருந்தவர்கள் மீதும், பேருந்தின் பின் பகுதியிலும் மோதியது. சிறிது தூரத்தில் சென்று லாரியை நிறுத்திவிட்டு, ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.

பேருந்தின் பின்னால் நின்றிருந்த ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ரத்தின மாணிக்கம்(56), நாகவர்த்தினி(45) என்ற 2 பெண்களும், தேசு வெங்கடராமாராவ்(45), கன்னிசேந்தி ராமையா(66) ஆகியோரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பேருந்தில் இருந்தவர்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் ரோந்து போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியம்(50) என்பவர் உயிரிழந்தார். 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x