Published : 16 Apr 2023 08:30 PM
Last Updated : 16 Apr 2023 08:30 PM

உலகின் குருவாக இந்தியா திகழ வேண்டும் - சேலத்தில் ஆர்எஸ்எஸ் மாநில தலைவர் குமாரசாமி பேச்சு

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்க விட்டல் கோவில் தெருவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுத்து பேரணியாக சென்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். | படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்: உலகின் குருவாக இந்தியா திகழ வேண்டும், உலகை அறம் ஆட்சி செய்ய வேண்டும் எனும் குறிக்கோள்களுடன் ஆர்எஸ்எஸ் பணியாற்றி வருவதாக ஆர்எஸ்எஸ் மாநிலத் தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில், சேலம் மற்றும் ஆத்தூரில் ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்) சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. சேலம் மாநகரில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தையொட்டி, மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தலைமையில், துணை ஆணையர்கள் லாவண்யா, கவுதம் கோயல் உள்பட போலீஸார் ஏராளமானோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, ஊர்வலத்துடனும், ஊர்வலப் பாதையிலும் போலீஸார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு மாநிலத் தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் சிவ காளிதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மையில் கருங்கல்பட்டி பாண்டுரங்க விட்டல் 2-வது வீதியில் காவிக் கொடியேற்றி, இறை வழிபாட்டுக்குப் பின்னர் ஊர்வலம் புறப்பட்டது. இதில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 400-க்கும் மேற்பட்டோர், காவிக்கொடி ஏந்தியபடி, பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலமாக சுமார் 2 கிமீ., தூரத்தைக் கடந்து, தாதகாப்பட்டி கேட் பகுதிக்கு வந்தனர். அங்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்புடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் மாநிலத் தலைவர் குமாரசாமி, ''ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் கட்டுக்கோப்பான ஊர்வலத்தைப் பார்த்த பொதுமக்கள், இந்து தர்மம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவை பாதுகாப்பாக இருப்பதற்கு இவர்கள் தான் காரணம் என்பதை அறிந்துள்ளனர். பாரதத் தாயை அரியணையில் ஏற்ற வேண்டும், உலகை அறம் ஆட்சி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆர்எஸ்எஸ் சேவகர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 1963-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய- சீனப்போரில், காயமடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சிகிச்சை அளித்து, ரத்த தானமும் செய்தனர். அவர்களது தேசப்பற்றை பாராட்டிய பிரதமர் நேரு, குடியரசு தினவிழாவில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு, அனுமதித்தார்.

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சாதி, மொழி வேறுபாடின்றி ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து, அண்ணல் அம்பேத்கார், மகாத்மா காந்தி ஆகியோர், தீண்டாமை இல்லா சமுதாயத்தை ஆர்எஸ்எஸ் ஏற்படுத்தி வருகிறது என்று பாராட்டினர். தமிழகத்தில், ராமலிங்க வள்ளலாரின் 200-வது ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், அவரது சன்மார்க்க கொள்கையை பரப்பும் பணியை, ஆர்எஸ்எஸ் மேற்கொண்டுள்ளது.

உலகின் குருவாக இந்தியாவை மாற்றும் தேசப்பணியில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டுள்ளது. தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைந்திருக்கக் கூடாதென்று தமிழகத்தில் சில சக்திகள் முயன்று வருகின்றன. ஆனால், தமிழக மக்கள், தேசப்பற்று மிக்கவர்களாக இருக்கின்றனர். வரும் 2024-ம் ஆண்டு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படவுள்ளது. அப்போது, தமிழகம் உள்பட நாடு முழுவதும், ஒவ்வொரு மண்டலத்திலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தப்படும்'' என்றார்.

இதேபோல், ஆத்தூரில், மாநில மக்கள் தொடர்பு செயலாளர் கல்யாண் தலைமையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, சேலம் எஸ்பி., சிவகுமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் ஏராளமானோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x