சிறைத்துறை அதிகாரிகளுக்கான சிறந்த பயிற்சி கையேடுகள் தயாரிப்பு - மதுரை சிறை உளவியல் நிபுணருக்கு விருது
மதுரை: சிறைத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சிக்கு சிறந்த கையேடுகளை தயாரித்த மதுரை சிறை உளவியல் நிபுணருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் பிபிஆர் டி, பீரோ ஆஃப் போலீஸ் ரீசர்ஸ் மற்றும் டெவலப்மெண்ட் என்ற அமைப்பு காவல், சிறைத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி ஒன்றை நடத்துகிறது. இதன்மூலம் அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அடிக்கடி அளிக்கப்படுகிறது. இது போன்ற பயிற்சிகென புதிய கையேடுகள் தயாரிக்க, இந்திய சிறைகளில் பணிபுரியும் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கண்டறிந்து கையேடுகளை தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, மதுரை மத்திய சிறையில் பணிபுரியும் உளவியல் நிபுணர் ஜெயந்தி என்பவரும் தேர்வானார்.
நல அலுவலர் அடிப்படை பயிற்சி, சிறை மருத்துவர் அடிப்படை பயிற்சி, சிறை மருத்துவர் இடைநிலை பயிற்சி, சிறைத்துறை சீர்திருத்த நிகழ்ச்சி, சிறை காவலர்களின் மன அழுத்த குறைப்பு பயிற்சி என 5 கையேடுகளை அவர் தயாரித்தார். இந்த 5 கையேடுகள் உட்பட மேலும், 50 கையேடுகளும் பிற மாநில நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மார்ச் 31-ல் டெல்லியில் நடந்த சிறப்பு நிகழ்வில், சிறந்த கையேடுகளை தயாரித்ததாக மதுரை சிறை உளவியல் நிபுணருக்கு பதக்கம் மற்றும் விருது வழங்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்ற நிலையில், தமிழ்நாடு சார்பில், மதுரை மத்திய சிறை உளவியல் நிபுணர் ஜெயந்தியும் பங்கேற்று பதக்கம், விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
