Published : 23 Sep 2017 09:21 AM
Last Updated : 23 Sep 2017 09:21 AM

தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் சமர்ப்பிப்பு: தேவைப்பட்டால் கூடுதல் ஆவணங்களை அளிப்போம் என கே.பி. முனுசாமி தகவல்

தேர்தல் ஆணையம் கோரும்பட்சத்தில், எங்கள் பக்கம் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலுடன், அவர்களின் பிரமாண பத்திரங்களையும் சமர்ப்பிப்போம் என அதிமுக நிர்வாகி கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

முன்னதாக, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அளித்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி அதிமுகவில் இரு அணிகளும் இணைந்தன. அதன்பின், செப்.12-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. இதில், அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமனத்தை ரத்து செய்தும் அவர் செய்த நீக்கங்கள், நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்ட விதிகளில் திருத்தம்

மேலும், அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே இல்லை. அதற்கு பதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் கே.பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். இருவருக்கும் பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டு, அதிமுக சட்ட விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதல் பொதுக்குழுவில் பெறப்பட்டது.

ஒரு கட்சியின் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள், தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமையும். இதையடுத்து, சமீபத்தில் டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. அதன்பின், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரின் ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், நிர்வாகிகளான துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, மாநிலங்களவை எம்பி வி.மைத்ரேயன், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

நேற்று காலை தேர்தல் ஆணைய முதன்மை அதிகாரியைச் சந்தித்த அவர்கள், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததற்கான ஆவணங்கள், பொதுக்குழுவில் சட்டப்படியாக இணைப்புக்கு ஒப்புதல் அளித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அளித்தனர்.

மேலும், பெரும்பான்மை எம்எல்ஏக்கள், தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்பதற்கான ஆவணங்கள், பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்கள், அவர்கள் அளித்த ஒப்புதல் தொடர்பான விவரங்களும் அளிக்கப்பட்டது. இதுதவிர, இரு அணிகளும் பிரிந்திருந்தபோது அளித்திருந்த பிரமாண பத்திரங்களையும் வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்து கடிதம் அளித்தனர். மேலும், சசிகலா நியமனம் ரத்து, அதன் மூலம் தினகரன் நியமனமும் ரத்து செய்யப்படுவதற்கான தீர்மானம், ஆதாரங்களையும் அளித்தனர். இதன் மூலம், சசிகலா நியமனத்தை ரத்து செய்வதுடன், இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தும் உரிமையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரினர்.

தேர்தல் ஆணையம் கெடு

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று இரு அணிகள் பிரிந்தபோது அவைத்தலைவர் மதுசூதனன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. அதேபோல், அதிமுகவின் இரட்டை இலை சின்னம், அதிமுக பெயர் ஆகியவை தங்களுக்குத்தான் சொந்தம் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் பிரிந்திருந்தபோது ஆவணங்கள் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதுசூதனன், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், வரும், செப்.29-ம் தேதிக்குள், ஜெயலலிதா மறைந்தபோது இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல், தற்போதுள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பட்டியல் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அக். 6-ம் தேதி இரு தரப்பும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர பொதுச்செயலாளர்

இவை தொடர்பாக, டெல்லியில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கே.பி.முனுசாமி கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப்பின், சில அரசியல் சூழல் காரணமாக, இரு அணிகளாக பிரிந்தன. ஒன்றரை கோடி தொண்டர்கள் விருப்பம், ஆட்சியை காப்பாற்றும் நோக்கிலும், இரு அணிகளின் தலைவர்களும் கலந்து பேசி இணைந்தார்கள். அந்த இணைப்பின் கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளோம். இணைப்புக்குப் பின், பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது, அவரை கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்றுதான் கூறுவார்கள். கட்சியின் முன்னணி தலைவர்கள், பொதுச்செயலாளர் என்ற பதவியை ஜெயலலிதாவுக்கு அர்ப்பணித்துவிடுவோம் என்ற முடிவெடுத்து அர்ப்பணித்தனர். அதற்கு பதில் பொதுச்செயலாளருக்கு இணையான அதிகாரம் கொண்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அமைப்பு உருவாக்கப்பட்டு, பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறப்பட்டது. இதற்கான விதிகளையும் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம்.

சசிகலா மற்றும் உங்கள் அணிக்கு தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸில், இம்மாதம் 29-ம் தேதிக்குள் ஆவணங்கள் தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளதே?

ஏற்கெனவே பொதுக்குழு தீர்மானத்தை வழங்கியுள்ளோம். தேர்தல் ஆணையம் கேட்கும்பட்சத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வோம்.

உங்கள் பக்கம் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் எண்ணிக்கை என்ன?

இந்த ஆட்சி நன்றாக செயல்படும் வகையில் அதிகபட்சமான நிறைவான, பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று உள்ளனர்.

இவ்வாறு முனுசாமி பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x