Published : 16 Apr 2023 07:12 AM
Last Updated : 16 Apr 2023 07:12 AM
சென்னை: சென்னை மாநகராட்சி பொறியாளரை தாக்கியதாக எழுந்த புகாரில் திமுகவில் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்ட திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கருக்கு ஓராண்டுக்கு பின்னர் கட்சியில் மீனவர் அணி துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் கே.பி.சங்கர். கட்சியில் திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பிலும் இருந்து வந்தார். சென்னை மாநகராட்சி பொறியாளரை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வந்ததால் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் அவரின் கட்சி பதவி பறிக்கப்பட்டது.
அப்போது, திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், திருவொற்றியூர் எம்எல்ஏ, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கே.பி.சங்கர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் விளக்கம் அளித்தார். ஆனாலும், அவருக்கு கட்சி பொறுப்பு ஓராண்டுக்கு மேலாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், திமுக மீனவர் அணி துணைத் தலைவராக கே.பி.சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை செல்வராஜுக்கு பொறுப்பு: அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், கட்சியில் பிளவு ஏற்பட்டபோது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். அந்த அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ், கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.
கடந்த 4 மாதங்களாக திமுகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்த கோவை செல்வராஜுக்கு தற்போது கட்சியில் செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் திமுகவை பலப்படுத்தும் வகையில், அதிமுகவில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தும் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க சில அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT