Published : 16 Apr 2023 07:15 AM
Last Updated : 16 Apr 2023 07:15 AM

சிந்து சமவெளி பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழுக்கே உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் முதல் பிரதியை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நூல் ஆசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன், `இந்து' என்.ராம், அரசு முதன்மைச செயலர் த.உதயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: சிந்து சமவெளி பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழுக்கே உள்ளது என்பதை ஆய்வுகள் கூறுகின்றன என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் ஒடிசா மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழியல் இந்தியவியல் ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலை வெளியிட தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து முதல்வர் பேசியதாவது: சங்க இலக்கியங்களை திராவிட இயக்க மேடைகளில் முழங்கியபோது, இதெல்லாம் இலக்கியம்தானே, வரலாறு இல்லையே என்று பலரும் நிராகரித்தார்கள். அந்த சொல்லியல் அனைத்துக்கும் இப்போது தொல்லியல் ஆதாரம் கிடைத்திருக்கிறது. அதைத்தான் பாலகிருஷ்ணன் அளப்பறிய பணியாக செய்து முடித்திருக்கிறார்.

சிந்து சமவெளி பண்பாடு என்பது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அப்போது வாழ்ந்த மக்கள் யார், அவர்கள் பேசிய மொழி எது என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை இந்த நூலில் காணலாம்.

சிந்து பண்பாடு பரவியிருக்கும் குஜராத், மகாராஷ்டிரா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் போன்ற இடங்களுக்குப் போய் ஆய்வு செய்து, அங்கு தமிழ்ப் பெயர்கள் இருப்பதை பதிவிட்டுள்ளார். சிந்து சமவெளி பயன்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழுக்கே உள்ளது என்பதை இந்த ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இவ்விழாவில், `இந்து' என்.ராம், ஒடிசா திறன் மேம்பாட்டு ஆணைய தலைவர் சுப்ரதோ பாக்சி, அரசு முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன், மானுடவியலாளர் பக்தவத்சல பாரதி, சர்மா மரபுக் கல்வி மைய நிறுவனர் சாந்தி பப்பு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் ஏற்புரையாற்றினார்.

முன்னதாக, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் வரவேற்றார். நிறைவில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக பொதுவியல் ஆய்வு மைய ஆய்வாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x