Published : 16 Apr 2023 04:17 AM
Last Updated : 16 Apr 2023 04:17 AM
ராமநாதபுரம்: சாயல்குடி அருகே நடந்த சினிமா படப்பிடிப்பில் இறந்தவர் போன்ற காட்சியில் நடித்த மூதாட்டி ஒருவர், ஒரு வாரம் கழித்து இறந்த சம்பவம் அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் உள்ள செம்மண் புஞ்சை நிலங்களில் 2,000-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இதனால் இங்கு பனைமரத் தொழில் மற்றும் விவசாயம் நடந்து வருகிறது. செம்மண் நிலம், பனை மரம், அருகில் மாரியூர் கடற்கரை என எழில் கொஞ்சும் அழகுடன் இக்கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராமத்தில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட திரைப்பட படப்பிடிப்புகள் நடந்துள்ளன. கடந்த சில வாரங்களாக 2 திரைப் படங்களுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. பெரியகுளம், மாரியூர், ஒப்பிலான், கிருஷ்ணாபுரம், கடுகுசந்தை மற்றும் சாயல்குடி, கடலாடி பகுதிகளைச் சேர்ந்த சுற்றுவட்டார கிராம மக்கள் படப்பிடிப்பை காண ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர்.
சிறு, சிறு கதாபாத்திரங்கள், குழு, கூட்டம் போன்றவற்றுக்கு உள்ளூர் மக்களை தேர்வு செய்து படப்பிடிப்பு குழுவினர் நடிக்க வைத்தனர். அவர்களுக்கு ரூ.500, சாப்பாடும் வழங்கியதால் உள்ளூர் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் நடித்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த ஒரு படப்பிடிப்பில் ஒரு காட்சியில் மூதாட்டி இறந்து, இறுதிச் சடங்கு செய்வது போன்ற காட்சி எடுக்கப்பட்டது.
இதில் பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்த 2 மூதாட்டிகளை நடிக்க வைத்தனர். அவர்களும் ஆர்வத்துடன் நடித்தனர். படப்பிடிப்பு முடிந்த மறுநாள் முதல் 80 வயதுள்ள ஒரு மூதாட்டிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பில் இறந்தவர் போன்ற காட்சியில் நடித்து விட்டு, இயற்கையாகவே மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரியகுளம் சுற்றுவட்டார கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT