சிங்கார சென்னை 2.0 திட்டம்: பூங்கா, விளையாட்டுத் திடல் அமைக்க ரூ.24 கோடி ஒதுக்கீடு

சென்னை மாநகராட்சி பூங்கா | கோப்புப் படம்
சென்னை மாநகராட்சி பூங்கா | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் புதிதாக பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், நீர்நிலைகள், மீன் சந்தை, இறைச்சிக் கூடம், பள்ளிக் கட்டடங்கள் அமைக்க ரூ. 24.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை 2.0 திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் புதிதாக 8 பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், நீர்நிலை மேம்பாட்டுப் பணி, மீன் சந்தை அமைத்தல், இறைச்சிக் கூடம் நவீன மயமாக்குதல், 3 பள்ளிக்கட்டடங்கள் என மொத்தம் 14 திட்டப்பணிகளுக்கு ரூ.23 கோடி நிதி, சென்னை மாநகராட்சி பங்களிப்பு நிதி ரூ.1.34 கோடி என மொத்தம் ரூ.24.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 2 பூங்கா, கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் அணுகு சாலையில் 1 பூங்கா, மணலி மண்டலத்தில் பொன்னியம்மன் நகர் 3வது தெருவில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 1 பூங்கா, மணலி புதுநகர் 3வது தெருவில் திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 1 பூங்கா, 35வது பகுதியில் 1 பூங்கா, வளசரவாக்கம் மண்டலத்தில் தமிழ் நகரில் நடைபாதை மற்றும் உடற்பயிற்சி வசதிகளுடன் கூடிய 1 பூங்கா, குறிஞ்சி நகரில் நடைபாதை, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளுடன் கூடிய விளையாட்டுத் திடல் என மொத்தம் 8 பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்கள் ரூ.4.28 கோடி மதிப்பில் அமையவுள்ளது.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோவில் குளத்தினை ரூ.2.99 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி, இராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் 102 கடைகள், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகளுடன் ரூ.2.69 கோடி மதிப்பில் மீன் சந்தை அமைக்கும் பணி, சைதாப்பேட்டையில் உள்ள இறைச்சிக்கூடத்தை நவீன வசதிகளுடன் சீரமைக்கும் பணிகள் ரூ.1.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தவிர்த்து, கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்டுகள், நூலகம், பசுமை வளாக வசதிகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் திருவல்லிக்கேணி, எல்லீஸ்புரம் சென்னை நடுநிலைப்பள்ளி, பெரம்பூரில் மார்க்கெட் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் புதிய காமராஜ் நகர் சென்னை நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 3 புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்ட ரூ.12.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in