

சென்னை: சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலா இல்லத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. அதில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் அம்பேத்கர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் என்ன கருத்தை மக்களுக்காக எடுத்துச் சொல்ல வேண்டுமோ, அதை எதிர்க்கட்சி சொல்லத் தவறுகிறது. அதிமுக உட்கட்சி பூசலை திமுக நன்றாக பயன்படுத்தி வருகிறது.
நான் எல்லோருக்கும் பொதுவானவள். சொந்த ஊர், சாதிகளை பார்ப்பதில்லை. அப்படி நினைத்திருந்தால், கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வராக ஆக்கி இருக்க மாட்டேன். ஜெயலலிதா, ஏழைக்கும் வாய்ப்பளித்து வெற்றி பெற வைத்து, அமைச்சராகவும் ஆக்கி இருக்கிறார். அவர் வழியில் வந்தவள் நான். எங்கள் வழி தனி வழியாகத்தான் இருக்கும். எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
தமிழகத்தில் நிதி நிறுவன மோசடிகளில் 2.75 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.