கீழ்கோத்தகிரி மேடநாடு வனப் பகுதியில் அனுமதியின்றி  அமைக்கப்பட்ட வழித்தடம்.
கீழ்கோத்தகிரி மேடநாடு வனப் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட வழித்தடம்.

வனத்துக்குள் அனுமதியின்றி சாலை அமைத்ததாக 3 பேர் மீது வழக்கு - சுற்றுலாத் துறை அமைச்சர் மருமகனுக்கு நோட்டீஸ்

Published on

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோடநாடு அருகில் மேடநாடு வனப்பகுதி உள்ளது. யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உட்பட வன விலங்குகள், இருவாச்சி போன்ற அரியவகை பறவையினங்கள், பூர்வீக சோலை மரக்காடுகள், குறிஞ்சிப் புதர்கள் எனச் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மேடநாடு உள்ளது. `மேடநாடு வனப்பகுதி' என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறையால் கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், மேடநாடு பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்துக்கு சாலை இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சாலை அமைத்திருப்பதாக வனத்துறையினருக்குப் புகார் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு சென்று வனத்துறை அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டதில், சட்டவிரோதமாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்தனர். அதையடுத்து, அனுமதி பெறாமல் நடைபெற்ற பணியில் ஈடுபட்ட எஸ்டேட் மேலாளர், கனரக இயந்திர ஓட்டுநர்கள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சட்டவிரோத பணிக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, நீலகிரி வனக்கோட்ட வன அலுவலர் கவுதமிடம் கேட்டபோது, ‘‘சுற்றுலாத்துறை அமைச்சரின் மருமகன் தேயிலைத் தோட்டம் இந்தப் பகுதியில் இருக்கிறது. இவரது தோட்டத்துக்குச் சாலையை இணைக்கும் வகையில், இடையில் வனப்பகுதியில் கைவிடப்பட்ட சாலையில் வனத்துறை அனுமதி பெறாமல் தடைசெய்யப்பட்ட இயந்திரங்களை கொண்டு சாலை விரிவாக்கம் செய்துள்ளனர்.

வனச்சட்டத்தின் அடிப்படையில் தோட்ட மேலாளர் பாலமுருகன், பொக்லைன் ஓட்டுநர்கள் உமர் ஃபாரூக், பங்கஜ்குமார் சிங் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். எஸ்டேட் உரிமையாளரான சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in