

சென்னை: மாநகராட்சி பூங்காக்களில் மக்களுக்கு மனநிறைவு அளிக்கும் வகையில் புனரமைப்புப் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் 786 பூங்காக்கள் பயன்பாட்டில் உள்ளன. இப்பூங்காக்களை சீரமைத்து, புனரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, ஒவ்வொரு பூங்காவிலும் 6 அடி உயரத்தில் 50 முதல் 100 எண்ணிக்கையில் நாட்டு மரக்கன்றுகள் நடுதல், செடிகள் நடுதல், புல்வெளி அமைத்தல், சுவர்களில் வர்ணம்பூசுதல், அமரும் இருக்கைகளை சீரமைத்தல், கூடுதலாக இருக்கைகள் அமைத்தல், விளையாட்டு உபகரணங்களை புதுப்பித்தல், புதிதாக நடைபயிற்சி பாதைகள் அமைத்தல், மின்விளக்குகளை சரிசெய்தல், செயற்கை நீருற்று அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களை பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு சிறந்த இடமாக மாற்றும் வகையில் இப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.