

மதுரை: மனிதக் கழிவுகளைச் சேகரிக்கும் வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றுகின்றனவா? என்பது குறித்து விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செப்டிக் டேங்க் கழிவுகளை வாகனங்களில் சேகரித்து அவற்றை நீர் நிலைகள் மற்றும் ஆற்றுப் படுகைகளில் வெளியேற்றுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்து வருகிறது.
பொதுமக்களும், குழந்தைகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் செப்டிக் டேங்க் கழிவுநீர் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவது குறித்து முறைபடுத்தவும், விருதுநகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், தமிழக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளர் எதிர்மனுதாராகச் சேர்க்கப்படுகிறார். அவரும், விருதுநகர் மாவட்ட ஆட்சியரும் மனித கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.