

ஆபரேஷன் சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகையில் பாதுகாப்பு வளையத்தை மீறி சென்னைக்குள்ளே நுழைய முயன்ற 11 பேர் பிடிபட்டனர்.
கடலோர பாதுகாப்புப் படை மற்றும் சென்னை காவல் துறையினர் இணைந்து ‘ஆபரேஷன் சாகர் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கையினை சென்னையில் இன்று முதல் நடத்தி வருகின்றனர். கடலோர பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு துறையினர் ஒருங்கிணைந்து இப்பாதுகாப்பு ஒத்திகையினை நடத்தி வருகிறார்கள்.
இப்பாதுகாப்பு ஒத்திகை சம்பந்தமாக கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுக்கு சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் விரிவான அறிவுரைகளை வழங்கி ஒத்திகையினை மேற்பர்வையிட்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் கூடுமிடங்கள், உயர் மட்டப் பாதுகாப்பு நிலைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையின்போது சென்னை நகருக்குள் ஊடுருவ முயன்ற 11 நபர்கள் இன்று பிடிபட்டனர்.
இன்று காலை 08.40 மணியளவில் ஜெ-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர், பெசன்ட் நகர் கடல் வழியாக தோணியில் ஆல்காட் குப்பத்திற்கு ஊடுருவ முயன்ற 3 நபர்களையும் பிடித்தனர்.
மெரினா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், காவல் அதிகாரிகள் நுழைவு வாயிலின் வழியாக உள்ளே நுழைய முயன்ற 3 நபர்களை பிடித்தனர்..
காலை 09.45 மணியளவில் கானத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் குழுவினர், பனையூர் குப்பம் அருகே ஊடுருவ முயன்ற 2 நபர்களை தடுத்து பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து பந்து போன்ற டம்மி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
காலை 11.15 மணியளவில் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் குழுவினர், அக்கரை செக்போஸ்ட்டில், மகாபலிபுரத்திலிருந்து பாரிமுனை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்து 2 சந்தேக நபர்களை பிடித்தனர்.
மேலும் இன்று காலை 11.50 மணியளவில் துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் குழுவினர், துறைமுக பகுதியில் ஊடுருவ முயன்ற ஒரு நபரை பிடித்தனர். மொத்தமாக சென்னை முழுதும் 11 நபர்களை போலீசார் பிடித்துள்ளனர். சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணிவரை தொடர்ந்து நடைபெற்று வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.