Published : 02 Sep 2017 02:41 PM
Last Updated : 02 Sep 2017 02:41 PM

திமுக எம்எல்ஏ.,க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தால் என்னவாகும்?- முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி பிரத்யேக பேட்டி

தற்போது உள்ள சூழ்நிலையில் எடப்பாடியை பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்காவிட்டால் திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து எதிர்ப்பை காட்டலாம் என்ற கருத்து உலாவி வருகிறது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழக சட்டசபை முடங்குமா என்பது குறித்து தேர்தல் ஆணையர் கோபால்சாமி, முன்னாள் தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஆகியோரிடம் தமிழ் இந்து சார்பில் கருத்து கேட்கப்பட்டது.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட முதல்வராக இருந்த ஓபிஎஸ் நீக்கப்பட்டு எடப்பாடி பொறுப்பேற்ற பின்னர் ஓபிஎஸ் தனி இயக்கம் தொடங்கினார்.

பின்னர் திடீரென ஓபிஎஸ், எடப்பாடி அணியினர் ஒன்று சேர இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் தனி அணியாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் பெரும்பான்மை ஆதரவை இழந்த முதல்வர் எடப்பாடி சட்டப்பேரவையை கூட்டி பெரும்பானமையை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வைத்தனர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்கட்சிகள் நேரடியாக சந்தித்து வலியுறுத்தினர். திருமாவளவன் தலைமையில் இடதுசாரி கட்சித்தலைவர்கள் ஆளுநரை சந்தித்து வலியுறுத்திய போது அதிமுக அணியினர் ஒன்றாகத்தான் உள்ளனர், சட்டபேரவையை கூட்ட முகாந்திரம் இல்லை, பந்து என்னிடம் இல்லை என்று தெரிவித்ததாக திருமாவளவன் பேட்டி அளித்தார்.

இது குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்ட போது பந்து அவரிடம் இல்லை என்றால் திமுகவிடம் உள்ள பந்தை நாங்கள் பயன்படுத்த வேண்டுமா என்பதை சட்டரீதியாக ஆலோசனை செய்து உரிய நேரத்தில் பயன்படுத்துவோம் என்று பேட்டி அளித்தார்.

இந்த அரசியல் இயக்கங்கள் இடையே திமுகவின் ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்து அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த உள்ளனர் என்ற கருத்து பரவலாக எழுந்தது.

அப்படி ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தால் அது சட்டபேரவையை கலைக்கும் நிலைக்கு கொண்டுச்செல்லப்படும் என்று ஒரு சாரரும், இல்லை எந்த மாற்றமும் நிகழாது என்று ஒரு சாராரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இது குறித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் கேள்வி எழுப்பினோம் அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்டாவிட்டால் திமுக எம்.எல்.ஏக்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாக ஒரு கருத்து நிலவுகிறது. அப்படி ராஜினாமா செய்தால் சட்டப்பேரவை தொடர்வதில் சட்ட சிக்கல் வருமா?

திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக 89 பேரும் ராஜினாமா செய்தால் எந்த சட்ட சிக்கலும் வராது. எடப்பாடி அரசுக்கு ரொம்ப வசதியாக போய்விடும்.

அப்படியானால் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தொடரலாமா?

தாரளமாக தொடரலாம் சட்டப்பேரவையில் இருக்கும் மீதமுள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தொடரலாம்.

ஒட்டுமொத்தமாக 89 உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் அது அரசியல் நெருக்கடியை உருவாக்காதா?

எந்த நெருக்கடியும் உருவாகாது. சொல்லப்போனால் சட்டபேரவையில் எடப்பாடிக்கு இன்னும் எளிதாக போய் விடும். அதிமுகவினர் மகிழ்ச்சியடைவார்கள்.

ராஜினாமா செய்த தொகுதிகள் குறித்து தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும்?

மீண்டும் அத்தனை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவார்கள்.

மொத்தமாக உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது என்பது எந்த விளைவையும் ஏற்படுத்தாதா?

ஒன்றும் ஏற்படுத்தாது, சற்றே பின்னோக்கி பார்த்தால் உங்களுக்குத் தெரியும் ஆந்திராவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா கோரிக்கையை முன் வைத்து மூன்று தடவைக்கு மேல் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த வரலாறு உண்டு.

இவ்வாறு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால் சாமி தெரிவித்தார்

இதே கேள்வியை முன்னாள் தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் வைத்தபோது அவர் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் ஒட்டுமொத்தமாக உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும். எதிர் வரிசையில் இருப்பபவர்களுக்கு மெஜாரிட்டி கூடி விடும் எந்தப் பிரச்சனையும் வராது.

பொதுவாகத்தான் நான் இதில் கருத்து சொல்ல முடியும், ஆனாலும் பெரும்பான்மை ஆட்கள் ராஜினாமா செய்தால் எதிர் தரப்பினருக்கு ஆதரவு கூடும். பெரும்பான்மையை நிரூபிக்க சிக்கல் வராது.

ஆனால் அதிகமான எம்.எல்.ஏக்கள் வைத்துள்ள அதிமுக பிரச்சனை இல்லாமல் தொடரத்தான் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அரசியல் ரீதியான பிரச்சனை இது இதில் அதிகம் கருத்து சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து எதிர்ப்பை காட்டினால் அது எடப்பாடி அணிக்கே சாதகமாக அமையும் என்பதே இருவர் கருத்தின் சாராம்சம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x