Published : 14 Apr 2023 03:39 PM
Last Updated : 14 Apr 2023 03:39 PM

நான் சாதி பார்த்திருந்தால் இபிஎஸ்ஸை முதல்வராக கொண்டு வந்திருக்க மாட்டேன்: சசிகலா 

சசிகலா | கோப்புப்படம்

சென்னை: நான் சாதி பார்த்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராகக் கொண்டு வந்திருக்கமாட்டேன் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.

சென்னையில் வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைத் தான் ஊடகங்கள் தினமும் பார்த்துக் கொண்டுள்ளன. பேச வேண்டிய நேரத்தில் எதை பேச வேண்டுமோ, மக்களுக்கு எதை எடுத்துக் கூற வேண்டுமோ, அதை பேச எதிர்க்கட்சிகள் தவறுகின்றன என்பதுதான் என்னுடைய கருத்து" என்றார்.

ஏப்.24ல் திருச்சியில் நடைபெறவுள்ள ஓபிஎஸ் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எனக்கு அழைப்பு கொடுத்தால், ஊடகங்களிடம் சொல்லாமலா சென்றுவிடப் போகிறேன். அழைப்பு வரட்டும். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்று பாருங்கள்" என்றார். ஓபிஎஸ்ஸின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எல்லோருக்கும் என்னைப்பற்றி புரிந்துகொள்ள ஒரு காலம் நேரம் வரும். அந்த காலநேரம் வரும்போது எல்லோருமே புரிந்துகொள்வார்கள். இது ஓபிஎஸ்ஸுக்கு மட்டுமல்ல, நான் பொதுவாக சொல்கிறேன்" என்றார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "சிவில் நீதிமன்றத்தின் முடிவு தெரியாமல், பிறப்பிக்கப்படும் எந்த உத்தரவும் நிரந்தரமல்ல என்று உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. இதுக்கு மேல நான் என்ன சொல்ல முடியும்" என்றார். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தவிர மற்றவர்கள் அதிமுகவில் இணையலாம் என்று இபிஎஸ் தரப்பில் கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இதுகுறித்து எங்கள் கட்சியின் தொண்டர்களிடம் கேட்டால் தெரியும். காரணம் நான் எல்லோருக்கும் பொதுவான நபர். எனக்கென்று இது சொந்த ஊர், அது சொந்த ஊர் என்று நான் நினைத்தது கிடையாது. அதுபோல சாதியிலும் அப்படி நான் நினைத்தது இல்லை. அப்படி நினைத்திருந்தால், ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக நான் கொண்டு வந்திருக்கமாட்டேன்.

என்னைப் பொருத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்றுதான் பார்க்கிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் அப்படித்தான் பார்த்தார். அவர், ஒரு ஏழைக்கும் எம்எல்ஏ வாய்ப்பு கொடுத்து, வெற்றி பெற வைத்து அமைச்சராகவும் மாற்றியிருக்கிறார். நாங்கள் அப்படி வளர்க்கப்பட்டவர்கள். எனவே, என்னுடைய வழி தனிவழியாகத்தான் இருக்கும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x