

கும்பகோணம்: கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலக வாயிலிலுள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கும்பகோணம் பகவத் விநாயகர் கோயிலில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் மாநிலச் பொதுச் செயலாளர் டி.குரு மூர்த்தி தலைமையில், அவரது பெயருக்குச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பங்கேற்றவர்கள் நீல நிறத்தில் மேல் சட்டையும், காவி வேஷ்டியும் அணிந்து வந்திருந்தனர்.
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பு சார்பில் மாநில பொதுச் செயலாளர் கா.பாலா தலைமையில் ஏராளமானோர் பங்கேற்று, அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்கிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்று அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட விடுதலை கழகம், நீலப்புலிகள் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்று, ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அம்பேத்கர் உருவச்சிலைக்கு முன், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய குடியரசு கட்சி மற்றும் தமிழக அரசுப் போக்குவரத்து கழக பாபாசாகேப் அம்பேத்கர் குடியரசு தொழிற்சங்க பேரவை சார்பில் தொழிற்ச் சங்க காப்பாளர் கா.முத்து பாரதி தலைமையில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.