அண்ணாமலையால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைளை எடுப்பார்கள்: ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி | கோப்புப்படம்
ஆர்.எஸ்.பாரதி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அண்ணாமலை யார் யார் மீது குற்றம்சாட்டியிருக்கிறாரோ, அவர்கள் சட்ட ரீதியாக நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அண்ணாமலை கூறி இருக்கின்ற குற்றச்சாட்டுக்களைப் பார்க்கின்றபோது, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தைப் பார்த்தால், எப்படி சிரிக்க தோன்றுமோ அதுபோலத்தான் தோன்றுகிறது. அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ள 17 பேருமே தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பது விதி. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பது மட்டுமின்றி, ஊடகங்கள், நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என்பதும் விதி.

அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின் முதல் டி.ஆர்.பாலு, துரைமுருகன் வரை அனைவருமே தேர்தலில் போட்டியிடும்போது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் தாக்கல் செய்த விவரங்களில் ஏதாவது விதிமீறல் இருந்தால், அந்த தொகுதியைச் சேர்ந்த சாதாரண குடிமகன்கூட நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ வழக்கு தொடர சட்டத்தில் உரிமை இருக்கிறது. அதுமட்டுமல்ல, தேர்தல் முடிவுகளை எதிர்த்தும் வழக்குத் தொடரலாம்.

அண்ணாமலையின் பேட்டியில், ஒரு இடத்திலாவது யாராவது லஞ்சம் வாங்கினார்கள் என்று சொல்லியிருக்கிறாரா என்றால் இல்லை. அண்ணாமலைக்கு எப்போதுமே உண்மையைச் சொல்லி பழக்கம் கிடையாது. அனைத்து ஊடகங்களின் முன், ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டார் என்று அண்ணாமலை சொன்னார். இதுபோலத்தான் அண்ணாமலை சொல்கின்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

அண்ணாமலை சம்பந்தம் இல்லாத சொத்து விவரங்களை எல்லாம் வெளியிட்டுள்ளார். எனவே, அவர் யார் யார் மீது குற்றம்சாட்டியிருக்கிறாரோ, அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பார்கள். அநேகமாக, அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாஜக சுற்றுப்பயணம் மேற்கொண்டது போல, நீதிமன்றங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவது அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் அவரவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தால், அவர் பதில் சொல்ல வேண்டியதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார். திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார். இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அண்ணாமலை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in