

சென்னை: தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். புதிய சாதனைகளை படைத்து, புதிய வெற்றிகளை பெற்று, வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழகத்தை படைத்திட இப்புத்தாண்டில் அனைவரும் உறுதி ஏற்போம். தமிழர் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழ் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் முத்திரை பதிக்கும் முத்தான சிந்தனைகள் உருவாகட்டும். உத்வேகம் பிறக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பாடுகள் அமைய அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: 2023-ம் ஆண்டு மலரும் இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டை உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் இன்று உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில், நம் தமிழக மக்களுக்கு வாழ்வில் புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும், மாநில வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக இப்புத்தாண்டு மலரட்டும். புதிய தமிழ்ப் புத்தாண்டு, வெற்றிகள் குவிக்கும் ஆண்டாக, நன்மைகள் பிறக்கும் ஆண்டாக, ஒளி பிறக்கும் ஆண்டாக, மகிழ்ச்சி நிலைக்கும் ஆண்டாக அமைய பாஜக சார்பிலே தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: வசந்தங்களை வாழ்க்கையில் நிறைக்க வரும் சித்திரை திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். சித்திரையில் வசந்தம் வரும், மகிழ்ச்சி வரும், அதேபோல் சமூகநீதியும் மலரும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழர்களின் வாழ்வில் புத்தொளி ஏற்றவும், அவர்கள் வாழ்வில் வளமுடன், நலமுடன் வாழதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: இந்த புத்தாண்டு, தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காவளத்தையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும். இறைவனும், இயற்கையும் அதற்குத் துணை நிற்க வேண்டும்.
ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து: தமிழ் கொண்டாட்டங்களின் தொடக்கமாக அமையும் சித்திரை திருநாளை உலகமெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சமக தலைவர் சரத்குமார், வி.கே.சசிகலா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.திருநாவுக்கரசர், பாரிவேந்தர் சட்டப்பேரவைகாங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.