

சென்னை: சட்டப்பேரவையில் வனத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பேசியதாவது:
யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தபோது மின்சாரம் தாக்கி சில யானைகள் உயிரிழந்தன. இந்த நிகழ்வுக்கு பின்பு வனத்துறையும் மின்சாரத்துறையும் இணைந்து கூட்டு களத்தணிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் இனிவரும் காலங்களில் மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
யானைகள் நகர்வை கண்காணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் யானைகள் வருகையை அறிவிக்கும் முன்னெச்சரிக்கை அமைப்பு ரூ.7 கோடியே 10 லட்சத்தில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்புமையம் ரூ.20 கோடியில் அமைக்கப்படும். தஞ்சை மாவட்டம் மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் ரூ.15 கோடியில் அமைக்கப்படும். ரூ.20 கோடியில் பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். வேடந்தாங்கல் பறவைகள்சரணாலயத்தில் ரூ.9.30 கோடியில்,கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ரூ.6 கோடியிலும், பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் ரூ.3.70 கோடியிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ரூ.1 கோடியில் மேம்படுத்தப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.