‘திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் பணிபுரிவோருக்கு அடிப்படை வசதிகள் இல்லை’

‘திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் பணிபுரிவோருக்கு அடிப்படை வசதிகள் இல்லை’
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை கூடத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பவித்ராதேவி, மாவட்ட செயலாளர் கே.சரஸ்வதி, மாநில குழு உறுப்பினர் எஸ்.பானுமதி ஆகியோர் திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பூர் மாநகரம், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளை எங்கள் அமைப்பை சேர்ந்த 38 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்தோம். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லை.

தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை தரையில் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. பிரேத பரிசோதனை அறை முன்பு நிழற்குடை வசதி இல்லை.கடும் வெயிலில் கால்கடுக்க பொதுமக்கள் நிற்பதை பார்க்க பரிதாபமாக உள்ளது.

பிணவறைக்கு சென்று அடையாளம் காட்டிவிட்டு வரும் பொதுமக்கள் கைகழுவக் கூட தண்ணீர் வசதி இல்லை. பிணவறை அருகே வரும் பெண்கள் பலர் அழுது மயக்கம் அடைகின்றனர். அவர்களுக்கும் தண்ணீர் வசதி இல்லை. தினசரி 5 முதல் 15 சடலங்கள் பிணவறைக்கு வருகின்றன. ஆனால் ஒரேயொரு நிரந்தர ஊழியர் 3 ஒப்பந்த ஊழியர்கள் தான் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு குடிநீர், கழிவறை, குளியலறை உட்பட எந்தவித வசதியும் அங்கு இல்லை.

கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு நேரங்களில் மருத்துவமனைகளில் தங்கி பணியாற்ற வேண்டும். மாவட்ட துணை செயலாளர்கள் பி.லட்சுமி, எஸ்.பானுமதி, ஆர்.கே.செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in