Published : 14 Apr 2023 05:42 AM
Last Updated : 14 Apr 2023 05:42 AM

சென்னை காவல் துறை சார்பில் சைபர் ஹேக்கத்தான் போட்டி: மாணவர்கள் - ஐடி வல்லுநர்களுக்கு அழைப்பு

சென்னை: புதுவகை சைபர் குற்றங்களுக்குத் தீர்வு காணும் வகையில் சென்னை காவல் துறை சார்பில் சைபர் ஹேக்கத்தான் போட்டி 5 தலைப்புகளில் நடத்தப்பட உள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள், ஐடி வல்லுநர்கள் கலந்துகொள்ளலாம் எனக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து, இணையதளத்தின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் அதன் வழியே நிகழ்த்தப்படும் குற்றங்களும் பெருகிவிட்டன. சைபர் குற்றங்கள் மட்டுமின்றி அனைத்து வகை குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளும் இணையதளத்தை, அதன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொள்கின்றனர்.

சைபர் குற்றங்களைப் புலனாய்வு செய்யவும், குற்றவாளிகளைக் கண்டறியவும், நவீன தொழில்நுட்பங்களின் உதவி தேவைப்படுகிறது. புதுவகை சைபர் குற்றங்களுக்கான தீர்வை கண்டறியும் முயற்சியின் முதல் படியாக, சென்னை பெருநகர காவல் துறை கடந்த டிசம்பர் மாதம் சைபர் ஹேக்கத்தான் ஒன்றை நடத்தியது.

தற்பொழுது புதுவித சவால்களுடன் அதற்கான தீர்வை நோக்கி சென்னை விஐடி பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2-வது சைபர் ஹேக்கத்தானை நடத்த முற்பட்டுள்ளது. இந்த சைபர் ஹேக்கத்தானின் சவால்களானது சைபர் க்ரைம் அதிகாரிகளின் புலனாய்விற்கு உதவி செய்யும் வகையில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மற்றும் தொடர்புடைய வாலட்டை கண்டறிதல், செல்போனிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை விரைந்து மீட்டெடுத்தல், குறிப்பிட்ட சொற்பதங்களை கொண்டு சமூக வலைதளங்களில் தொடர்புடைய பதிவுகளைத் தேடுதல், சிசிடிவி காட்சிப் பதிவுகளில் வழக்கத்துக்கு மாறாகத் தென்படும் நபர்களையோ பொருட்களையோ கண்டறிந்து தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்புதல், டெலிகிராம் போன் அழைப்பின் அழைப்பாளரின் நிகழ்கால இருப்பிடத்தைக் கண்டறிதல் ஆகிய 5 தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த சைபர் ஹேக்கத்தானில் கலந்து கொள்ள https://vitchennai.acm.org/cyberx.html என்ற இணையதள லிங்கை பயன்படுத்தி விவரங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களைப் பதிவு செய்யக் கடைசி தேதி 30.04.2023. ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள், ஐடி வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.

போட்டிக்கான விதிமுறைகள் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்டப் போட்டிகள் மே 19 மற்றும் 20ஆகிய தேதிகளில் சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. ஹேக்கத்தானில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.30 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ.20,000/- வழங்கப்பட உள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, சைபர் க்ரைம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு, காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x