ரத்ததானம் செய்திட முன்வர வேண்டும்: தமிழக மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

ரத்ததானம் செய்திட முன்வர வேண்டும்: தமிழக மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
Updated on
1 min read

நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழகம் 100 விழுக்காடு இலக்கை எய்திட பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் ரத்ததானம் செய்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்வதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ரத்தம் உயிரின் நாடி என்பதால், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்ததான நாளாக அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் போதுமான அளவு ரத்தத்தை தன்னார்வ கொடையாளிகள் மூலம் பெற தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து ரத்ததான முகாம்களை நடத்துகிறது. இந்த முகாம்களில் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களும் அதிக அளவில் பங்கேற்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன், தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்க இரத்தக் கொடையாளர்கள், ரத்த தான முகாம் அமைப்பாளர்கள் மற்றும் அரசு இரத்த வங்கி ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசால் பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்படுகிறது.

நாம் ஒவ்வொருவரும் தானமாக அளிக்கும் ஒரு அலகு ரத்தம் நான்கு இரத்தக்கூறுகளாக பிரித்தெடுக்கப்பட்டு, நான்கு உயிர்களை காப்பாற்ற உதவுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இவ்வாறு சேகரிக்கப்பட்ட ரத்தம் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் 8,89,849 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசு ரத்த வங்கிகளால் கடந்த ஆண்டு 4090 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, 3,49,566 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இவற்றில், 99 விழுக்காடு தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலமாக பெறப்பட்டுள்ளன.

தன்னார்வ ரத்தக் கொடையாளர்கள் மூலம் ரத்தத்தை சேகரிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

எனவே, நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழகம் 100 விழுக்காடு இலக்கை எய்திட பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் ரத்ததானம் செய்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in