Published : 14 Apr 2023 06:09 AM
Last Updated : 14 Apr 2023 06:09 AM
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் உயர்மட்ட விசாரணை அதிகாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் பெ. அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி அவர் விசாரணை மேற்கொண்டார். இதை தொடர்ந்து வரும் 17, 18-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமது அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்கிறார்.
அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் காவல்துறையால் விசாரணை கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக விசாரணை அலுவலரிடம் நேரில் புகார் அளிக்க விரும்புபவர்கள், ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்குமூலங்களை அளிக்க விரும்புவோர் இந்த நாட்களில்
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்பாக நேரில் ஆஜராகலாம். ஏற்கெனவே சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் வாக்குமூலம் அளித்தவர்கள் மீண்டும் ஒருமுறை வரவேண்டியது கட்டாயம் இல்லை. ஆனால் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்னிலையில் மீண்டும் ஒருமுறை வாக்குமூலம் அளிக்க விரும்பினாலோ, புகார் மற்றும் கூடுதல் தகவல்களை அளிக்க விரும்பினாலோ அவர்களும் நேரில் வரலாம். பாதிக்கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களும் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அலுவலரிடம் நேரடியாக புகார் அளிக்க இயலாதவர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக புகார் அளிக்கலாம் அல்லது இந்த இரு நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 82488 87233 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ, வாட்ஸ்அப் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT