சாலையோரங்களில் 2,000+ வாகனங்கள்: அதிரடி நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீவிரம்

சாலையோரத்தில் வாகனங்கள் | கோப்புப் படம்
சாலையோரத்தில் வாகனங்கள் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் நீண்ட நாட்களாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலின்போது, தெருக்கள், சாலைகளில் கைவிடப்பட்ட வாகனங்களால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் அவை அகற்றப்படும் என மேயர் பிரியா அறிவித்தார். இதைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில், மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக நீண்ட நாட்களாக சாலைகள் மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்று இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, வார்டு உதவி பொறியாளர் தலைமையில், போக்குவரத்து போலீசார் அடங்கிய குழு அமைக்கப்படும். அக்குழுவினர் முதல் 15 நாட்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் குறித்த பட்டியலை சேகரிக்க உள்ளனர். அதற்குள், வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை அகற்றிக் கொள்ள வேண்டும். வாகனங்களை தாமாக முன்வந்து அகற்றாத பட்சத்தில், மாநகராட்சியால் அமைக்கப்பட்ட குழுவினர் வாகனங்களை அகற்றுவர். மாநகராட்சி அகற்றிய வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 15 நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம்.

அவ்வாறு உரிமை கோரப்படாத வாகனங்கள், குறிப்பிட்ட நாட்களுக்கு பின், பொது ஏலத்தில் விடப்படும். வாகனங்களை அகற்றுவதன் வாயிலாக, பொதுமக்களுக்கு இடையூறற்ற சிறந்த போக்குவரத்திற்கும், குப்பைகளற்ற சிறந்த துாய்மை பகுதியாகவும் திகழ்ந்திட வழிவகை ஏற்படும்" என்று அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in