தி.மலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மதம் சார்ந்த நிகழ்ச்சி நடத்துவதை தடுத்து நிறுத்துக: மார்க்சிஸ்ட்

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி.
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சி நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

தனியார் அமைப்பு சார்பில் உலக நன்மை என்ற பெயரில் குபேர மகாலட்சுமி யாகம், 108 கோ பூஜை, 1008 சங்கு அபிஷேகம், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நாளை (ஏப்ரல் 14-ம் தேதி) அதிகாலை 4.30 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்களின் பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஆட்சியர் பா.முருகேஷ் பெயரையும் விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில், அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சமயம் சார்ந்த நிகழ்ச்சி நடைபெற அனுமதி வழங்கியதற்கு கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருவண்ணாமலை செங்கம் சாலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி வளாகத்தில் ஏப்ரல் 14-ம் தேதி (நாளை), இந்து சமயம் சார்ந்த வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகிறது. அனைத்து இன பிரிவுகளை சார்ந்த மாணவர்களும், நல்லிணக்கத்துடன் அரசு கல்லூரியில் படித்து வருகின்றனர்.

ஒரு மதத்தின் வழிபாடு நிகழ்வு நடைபெற்றால், வேறு மதத்தை சேர்ந்தவர்களும் கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய சூழல் உருவாகும். இதனால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மதம் சார்ந்த வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in