Last Updated : 13 Apr, 2023 06:09 PM

1  

Published : 13 Apr 2023 06:09 PM
Last Updated : 13 Apr 2023 06:09 PM

சேலம்: காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்

மேட்டூர்: சேலம் - எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த 4 மாணவர்கள், கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பி.ஏ தமிழ் 3-ம் ஆண்டு படிக்கும் 10 மாணவர்கள் இன்று காலை கல்வடங்கம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவாக இருப்பதால், குளிக்க ஆற்றின் நடுப்பகுதிக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது, ஒரு மாணவர் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டுள்ளார். இவரை மீட்க சக மாணவர்கள் உதவி செய்யும் போது, 4 மாணவர்கள் தண்ணீரில் சிக்கி மூழ்கியுள்ளனர். இதனைப் பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டனர். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒடி வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், எடப்பாடி தீயணைப்பு துறையினர், தேவூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நீச்சல் தெரியாததால் இளம்பிள்ளையைச் சேர்ந்த மணிகண்டன் (20), கன்னந்தேரியே சேர்ந்த மணிகண்டன் (20), எருமபட்டியை சேர்ந்த முத்துசாமி (20) மற்றும் எடடிகுட்டமேட்டை சேர்ந்த பாண்டியராஜன் (20) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. நீரில் மூழ்கிய 4 மாணவர்களை தேடும் பணியில் எடப்பாடி தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் எருமபட்டியை சேர்ந்த முத்துசாமி (20), இளம்பிள்ளையைச் சேர்ந்த மணிகண்டன் (20) ஆகியோரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும், 2 பேரின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மேட்டூர் ஆர்டிஓ தணிக்காசலம், சங்ககரி டிஎஸ்பி ஆரோக்கியராஜ், சங்ககரி தாசில்தார் பானுமதி, எடப்பாடி தாசில்தார் லெனின் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அறிந்த பெற்றோர்கள், குடும்பத்தினர் கதறி அழுதனர். அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றின் பகுதியில் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சங்ககரி, தேவூர் போலீஸார் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி ஆற்றில் 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் நிதியுதவி அறிவிப்பு: காவிரி ஆற்றில் முழ்கி மரணம் அடைந்த 4 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, கல்வடங்கம் கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் மணிகண்டன், த/பெ.மணி (வயது 20), முத்துசாமி, த/பெ.செல்வம் (வயது 20), மணிகண்டன் (வயது 20) மற்றும் பாண்டியராஜன் (வயது 20) ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x