

சென்னை: அமித்ஷா குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சை, அவைக்குறிப்பில் இருந்து நீக்காததால் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அதிமுக கொறடா வேலுமணி “ஐபிஎல் பாஸ் கிடைக்க விளையாட்டுத் துறை அமைச்சர் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்” என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ (BCCI). அதற்கு உங்கள் நெருங்கிய நண்பரான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாதான் தலைமை பொறுப்பில் உள்ளார். நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தர வாய்ப்பில்லை. நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார்கள். எனவே அவரிடம் பேசி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஐந்து பாஸ் வாங்கித் தந்தால்கூட போதுமானது. நாங்கள் அதற்கு காசு வேண்டுமானாலும் கொடுக்கிறோம்" என்று தெரிவித்தது அவையை சிரிப்பலையில் குலுங்க வைத்தது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் ஐபிஎல் போட்டி குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
இதற்குப் பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் மரியாதைக் குறைவாக எதுவும் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் நானே நீக்கச் சொல்லிவிடுவேன். திரு என்று சொல்லிதான் அமைச்சர் பேசியுள்ளார்” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.