

கோவை: கேரளாவில் ரயில் பயணிகள் கொல்லப்பட்ட வழக்கில் கைதான ஷாரூக் ஷபிக்கும், கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவர்களும் தொடர்பில் இருந்தார்களா என கோவை மாநகர போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 2-ம் தேதி கேரளா மாநிலத்தின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு வந்த ரயிலில் பயணித்த 3 பயணிகள், சக பயணி ஒருவரால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக டெல்லி ஷாகின் பாக்கைச் சேர்ந்த ஷாரூக் ஷபி (24) என்பவர் கடந்த 4-ம் தேதி கேரளா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்தாண்டு அக்.23-ம் தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாலை கோவை கோட்டைமேடு, கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
விசாரணையில், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரான முபின், மக்களை கொல்லும் நோக்கில் காரில் வெடிமருந்துகளை நிரப்பி எடுத்து வரும்போது, எதிர்பாராத விதமாக காஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதேபோன்று, கடந்தாண்டு நவம்பர் மாதம் கா்நாடக மாநிலம் மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், குக்கர் குண்டுவெடிப்புக்கு முன்னர் கோவை காந்திபுரத்துக்கு வந்து தங்கியதும், கோவையில் பல்வேறு இடங்களை நோட்டமிட்டதும் கண்டறியப்பட்டது.
இம்மூன்று சம்பவங்களும் ஒரே வகையிலான தாக்குதலாக இருப்பதால், கேரளாவில் ரயில் பயணிகளை எரித்துக் கொன்ற வழக்கில் கைதான ஷாரூக் ஷபிக்கு கோவையில் யாரிடமாவது தொடர்புள்ளதா என கோவை மாநகர போலீஸ் விசாரித்து வருகிறது.
கோவை மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகளால் தென் மாநிலங்களில் பொதுமக்களை குறி வைத்து இதுபோன்ற தாக்குதல் அரங்கேற்றப்படுகின்றன. ஷாரூக் ஷபி கோவைக்கோ, தமிழகத்தின் பிற பகுதிக்கோ வந்து சென்றாரா, யாரையாவது சந்தித்தாரா என விசாரிக்கிறோம்.
சைபர் கிரைம் போலீஸார், தொலைதொடர்பு நிறுவனங்கள், இணைய நெறிமுறை விவரப்பதிவு முறை ஆகியவற்றின் மூலம் எங்களது விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். மேற்கண்ட 3 சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா எனவும், ஷபியின் செல்போன் எண், வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் யார், யாரிடம் பேசினார், அவர்களுக்கும் ஷபிக்கும் என்ன தொடர்பு? பேசிய நபர்களுடைய பின்புலம், கார் வெடிப்பில் கைதானவர்கள், அவர்களின் ஆதரவாளர்களுடன் ஷபி பேசினாரா, தொடர்பில் இருந்தாரா என விசாரித்து வருகிறோம்.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட அழைப்புகளை ஆய்வு செய்துள்ளோம். தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். செல்போன் மட்டுமின்றி பிரத்யேக செயலிகள் மூலமாக பேசினரா? முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தாரா எனவும் விசாரித்து வருகிறோம்,’’ என்றார்.
மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘கேரளா ரயில் பயணிகள் எரிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை பின்தொடர்ந்து வருகிறோம். ஷபிக்கும், கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம்’’ என்றார்.
தென்மாநிலங்களில் பொதுமக்களை குறிவைத்து இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன