Published : 13 Apr 2023 05:33 AM
Last Updated : 13 Apr 2023 05:33 AM

சென்னை - கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கட்டண வேறுபாடு ஏன்? - ரயில்வே நிர்வாகம் விளக்கம்

சென்னை: சென்னை- கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தில் உள்ள வேறுபாடு குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். புதன்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு ஏசி எக்ஸிகியூட்டிவ் பெட்டியும் என 8 பெட்டிகள் இருக்கின்றன.

இந்த வந்தே பாரத் ரயில் கட்டணத்தில் வேறுபாடு உள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். அதாவது, சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் சேர் கார் வகுப்பு கட்டணம் ரூ.2,485-ம், ஏசி சேர் கார் வகுப்பு கட்டணமாக ரூ.1,365-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மறுமார்க்கமாக கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரும்போது, எக்ஸிகியூட்டிவ் சேர் கார் வகுப்பு கட்டணமாக ரூ.2,310 ஆகவும், ஏசி சேர் கார் வகுப்பு கட்டணம் 1,215 ஆகவும் உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே உயரதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: சென்னை - கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் அடிப்படைக் கட்டணம் ரூ.1,900, உணவு கட்டணம் ரூ.349, முன்பதிவு கட்டணம் ரூ.60, அதிவிரைவு கட்டணம் ரூ.75, ஜிஎஸ்டி ரூ.101 என மொத்தம் 2,485 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏசி சேர் கார் வகுப்பில் அடிப்படைக் கட்டணம் ரூ.941, உணவு கட்டணம் ரூ.288, முன்பதிவு கட்டணம் ரூ.40, அதிவிரைவு கட்டணம் ரூ.45, ஜிஎஸ்டி ரூ.51 என ரூ.1,365 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உணவுக் கட்டணம்: கோவையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயிலில் செய்தித்தாள், தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அதேநேரம், சென்னையில் இருந்து பகல் 2.25 மணிக்குப் புறப்படும் ரயிலில் மாலையில் செய்தித்தாள், தேநீர், ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவும் வழங்கப்படுகிறது. அதனால் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் ரூ.175-ம், ஏசி சேர் காரில் ரூ.150-ம் அதிகமாக உள்ளது.

எனவே, வந்தே பாரத் ரயிலில் இரு மார்க்கத்திலும் உணவுக் கட்டணம் அதிகரிப்பைத் தவிர மற்ற கட்டணங்களில் வித்தியாசமில்லை. இவ்வாறு அந்த ரயில்வே உயரதிகாரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x