

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூரில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணியை காணொலி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார். அங்கு அகழ் வைப்பகம் அைமக்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே உள்ள பட்டரைபெரும்புதூர் கிராமம் பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் இருந்தே பெருமூர், சிம்மலாந்தக சதுர்வேதி மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு கடந்த 2015-2016 மற்றும் 2017-2018 ஆகிய ஆண்டுகளில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த அகழாய்வுப் பணி, பட்டரைபெரும்புதூரில் இரு கட்டங்களாக ஆலைமேடு, நத்தமேடு, இருளன்தோப்பு மற்றும் சிவன்கோயில் ஆகிய இடங்களில் சுமார் 825 சதுர மீட்டர் பரப்பளவில் 33 குழிகள் தோண்டப்பட்டு நடந்தது. இதில், கற்காலம் முதல் வரலாற்று தொடக்க கால வரையிலான பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கிய பொருட்கள் கிடைத்தன.
இதன்படி கற்கருவிகள், கருப்பு சிவப்பு மட்கலன்கள், மெருகூட்டப்பட்ட கருப்பு மட்கலன்கள், யானை தந்தத்தினால் ஆன கழுத்து ஆபரணம், சுடு மண்ணால் ஆன மணிகள், தமிழ் பிராமிஎழுத்துக் கொண்ட பானை ஓடுகள், ரோமானியர்கள் வருகையைப் பறைசாற்றும் ரவுலட்டட்மட்பாண்டங்கள், ரோமானியர்கள் வாசனை புகைக்காக பயன்படுத்தும் சந்தன கட்டைகளை எரிக்கும் கூம்பு வடிவ ஜாடிகள், உறை கிணறு உள்ளிட்ட 1,404 தொல் பொருட்கள் கிடைக்கப்பெற்றன.
இந்நிலையில், தொல்லியல்துறை சார்பில் பட்டரைபெரும்புதூரில் ரூ.30 லட்சம் மதிப்பில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த 6-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இப்பணி தொல்லியல் துறை அகழாய்வு இயக்குநர் ஜே.பாஸ்கர், தொல்லியல் அலுவலர் சுரேஷ் மற்றும் ஆய்வாளர்கள் மற்றும் சுமார் 25 தொழிலாளர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் வரை நடைபெற உள்ள இந்த பணி, தற்போது தரை மட்டத்தில் இருந்து 40 செ.மீ.ஆழம் மற்றும் 10 அடி அகலம், 10 அடி நீளம் கொண்ட 3 குழிகள் தோண்டப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை சுடுமண் மணிகள், பானை ஓடுகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கிடைத்துள்ளன. அவை எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து விரைவில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரூ.2.70 கோடி மதிப்பில்: ஏற்கெனவே நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் தற்போதைய அகழாய்வுப் பணியில் கிடைக்கும் பொருட்களை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பட்டரைபெரும்புதூரில் ரூ.2.70 கோடி மதிப்பில் தொல் பழங்கால அகழ் வைப்பகம் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.