

மதுரை: பிரம்மாண்டமாக கட்டப்பட்ட நத்தம் பறக்கும் பாலத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை, நகரின் மற்ற சாலைகளை போல் வாகன நிறுத்துமிடமாக மாறத் தொடங்கியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தவிட்டால் நிரந்தர வாகனக் காப்பகமாக மாறுவதோடு நெரிசல் அதிகரிக் கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
மதுரை-நத்தம் சாலையில் ரூ.612 கோடி யில் 7.3 கி.மீட்டருக்கு கட்டியுள்ள பறக்கும் பாலத்தை கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
தற்போது இந்தப் பாலத்தில் மக்கள், வாகன ஓட்டிகள் நெரிசலின்றி பயணம் செய்கின்றனர். ஆனால், பாலத்தின் கீழ் பகுதியில் செல்லும் நான்கு வழிச்சாலையில் அதிவேகத்தில் வாகனங்கள் பயணிப்பது, சாலையை வாகன நிறுத்துமிடமாக மாற்றுவது, நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் சாலையில் செயற்கை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்து அபாயமும் உருவாகியுள்ளது.
சாலையையும், பாலத்தையும் அமைத்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் (என்.எச்.ஏ.), பாலத்தின் கீழ் பகுதியில் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகளையும், வாகனங் கள் நிறுத்துவதையும் ஒழுங்குபடுத்தாமல் உள்ளது. சாலையில் நடைபாதைப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை.
சில இடங்களில் நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டி உள்ளது. வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்களின் முன் கற்கள் பதிக்காமல் இடம் விட்டுள்ளனர். அதனால், இப்பகுதிகளில் மண்ணும், கற் களும் குவிந்துள்ளன.
சாலையோரக் கடைகள், வீடுகளின் முன் மக்கள் நடைபாதையை கடப்பதற்கு இன்னும் தடுப்புகள் போடவில்லை. அப்பகுதியில் நடைபாதைக்குத் தகுந்தவாறு சாலையை ஒழுங்குபடுத்தவும் இல்லை. அதனால், மக் கள் நடைபாதையை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை.
தள்ளுவண்டி, சாலை யோரக் கடைகள் ஆக்கிரமிப்புகள் தொடங்கி உள்ளன. இந்தக் கடைகளில் இரவு நேரத்தில் சாப்பிடுவதற்காகவும், பொருட்கள் வாங்கு வதற்காகவும் சாலையில் வாகனங்களை நிறுத்துகின்றனர். அதனால், நகரின் மற்ற சாலைகளைப் போல் நத்தம் பறக்கும் பாலத்தின் கீழ் செல்லும் சாலை வாகன நிறுத்து மிடமாக மாறி உள்ளது.
குறிப்பாக டிஆர்ஓ காலனி அருகே, ரிசர்வ் லைன்-ஆத்திகுளம் சாலை சந்திப்பு, பலாமி குடியிருப்பு சாலை, நாராயணபுரம், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, யாதவா பெண்கள் கல்லூரி, பொறியாளர் நகர், ஊமச்சிகுளம் போன்ற இடங்களில் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவிட்டுச் செல்கிறார்கள். வாடகை கார்கள், சிறு கனரக வாகனங்கள், தள்ளுவண்டிகளை வாகனக் காப்பகம் போல நிரந்தரமாக இரவில் நிறுத்துகின்றனர்.
பாலத்துக்குக் கீழ் சாலையில் வாகனங் களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மெதுவாகச் செல்ல வேண்டி உள்ளது. போக்குவரத்து மிகுந்த நேரத்தில் சாலையில் நெரிசலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் தடையின்றிச் சாலையைக் கடந்து செல்ல முடியவில்லை.
பாலத்தின் கீழ் பகுதியில் நெரிசல் ஏற் படாமல் இருக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், மாநகராட்சி, காவல்துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து நடவடிக் கையில் இறங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.