

சேலம்: சேலம்- சென்னை 4 வழிச்சாலை வழியாக, ஆத்தூர் நகருக்குள் வரும் வாகனங்கள், 4 வழிச்சாலையின் குறுக்கே பயணித்து நகருக்குள் வர வேண்டி இருப்பதால், விபத்து அபாயத்தை போக்கிட, மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் செல்லும் பேருந்துகள் யாவும், சேலம்- சென்னை 4 வழிச்சாலை வழியாக, ஆத்தூர் நகருக்குள் வந்து செல்வது வாடிக்கை.
இவ்வாறு சேலத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் யாவும், ஆத்தூர் நகருக்குள் வருவதற்கு, செல்லியம்பாளையம் என்ற இடத்தில், சேலம் - சென்னை 4 வழிச்சாலையின் குறுக்கே கடந்து, ஆத்தூர் நகருக்குள் வர வேண்டியிருக்கிறது.
கனரக வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை அதிவேகமாகச் சென்று வரும் 4 வழிச்சாலையில், தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையின் குறுக்கே கடந்து வருவது, மிகவும் அபாயமான செயலாக உள்ளது. இந்த விபத்து அபாயத்தைப் போக்கிட, செல்லியம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: சேலத்தில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் ஆத்தூர் நகருக்குள் வந்து செல்கின்றன. மேலும், ஆத்தூர் நகருக்குள் வரக்கூடிய லாரிகள், கார்கள் உள்ளிட்டவையும், செல்லியம்பாளையம் என்ற இடத்தில், 4 வழிச்சாலையின் குறுக்கே சாலையைக் கடந்து வர வேண்டியுள்ளது. இந்த சாலையை ஒட்டி, இருபுறமும் செல்லியம்பாளையம் கிராம குடியிருப்புகளும் உள்ளன. இவற்றில் வசிக்கும் மக்களும் 4 வழிச்சாலையை அடிக்கடி கடந்து சென்று வருகின்றனர்.
சேலம்- சென்னை 4 வழிச்சாலையில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வரும் நிலையில், பேருந்துகளும், மக்களும் சாலையை எந்நேரமும் கடந்து செல்வது, விபத்து அபாயத்தை அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகன ஓட்டிகள், இந்த சாலையின் விபத்து அபாயம் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், விபத்து அபாயம் உள்ள இடத்தில், சாலையில் போதுமான எச்சரிக்கை பலகைகள், எச்சரிக்கை விளக்குகள் போன்றவை இல்லை. இந்த இடம் குறுகலாகவும் இருக்கிறது. எனவே, முதல்கட்டமாக, செல்லியம்பாளையம் பகுதியில் விபத்து அபாயத்தை தடுக்கும் வகையில், கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், நிரந்தர தீர்வாக, 4 வழிச்சாலை வழியாக செல்லும் வாகனங்களுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும், என்றனர்.
வாழப்பாடியிலும் அபாயம்: ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையத்தைப் போல, சென்னை- சேலம் 4 வழிச்சாலையில், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி ஆகிய இடங்களிலும் பேருந்துகள், 4 வழிச்சாலையின் குறுக்கே கடந்து வர வேண்டிய ஆபத்தான நிலை உள்ளது. இந்த இடங்களில், விபத்து எச்சரிக்கை தடுப்புகளை கூடுதலாக வைக்க வேண்டும்.
மேம்பாலம் கட்டுவதற்கும் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் போதுமான எச்சரிக்கை பலகைகள், எச்சரிக்கை விளக்குகள் போன்றவை இல்லை. இந்த இடம் குறுகலாகவும் இருக்கிறது.