Published : 13 Apr 2023 06:26 AM
Last Updated : 13 Apr 2023 06:26 AM
திருச்சி: ரூ.1,500 கோடியில் அடுத்தடுத்து வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட பசுமை பூங்கா சிதிலமடைந்து கேட்பாரற்ற நிலையில் இருப்பது திருச்சி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் அனைவரும் பிரமிக்கும் வகையில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பகுதி பஞ்சப்பூர். ரூ.850 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், ரூ.600 கோடியில் டைடல் பார்க், ரூ.77 கோடியில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை என பஞ்சப்பூர் பகுதியில் அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், கடந்த சில மாதங்களாக பல்வேறு வர்த்தக நிறுவனங்களும், பொதுமக்களும் சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூர் பகுதியில் முதலீடு செய்ய போட்டிப்போட்டு வருகின்றனர்.
ஆனால், இதே பஞ்சப்பூர் பகுதியில் நெடுஞ்சாலையையொட்டி மாநகராட்சிக்கு சொந்தமான 22.50 ஏக்கரில், அரசு சார்பில் ரூ.1 கோடி, பொதுமக்கள், வணிக நிறுவனங்களின் பங்களிப்பாக ரூ.50 லட்சம் நிதி திரட்டப்பட்டு 2013-ம் ஆண்டு பசுமை பூங்கா உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டது.
பசுமை பூங்காவில் நடைபாதைகள், அணுகு சாலைகள், மூலிகைச்செடிகள், தியானமண்டபம், சிறு அளவிலான விலங்கியல் பூங்கா, மண்திடல், சைக்கிள் ஓட்டும் தளம், உலக அதிசயங்களின் மாதிரிகள் என பல்வேறு அம்சங்கள் அமைக்கப்பட்டன. மேலும் நகர்ப்புற பசுமைக்காடுகள் திட்டத்தின் கீழ் இங்கு 3.50 ஏக்கர் பரப்பில் 1,432 மரக்கன்றுகளும் நடப்பட்டன. இதுதவிர, இங்கு சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி அரங்கம் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டன.
இதனால், பசுமை பூங்கா பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இங்கு அமைக்கப்பட்ட 7 உலக அதிசயங்களின் மாதிரி அனைவரையும் கவர்ந்தது. இதனால், பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக இங்கு படை எடுத்து வந்தனர்.
ஆரம்ப காலத்தில் பசுமைப் பூங்காவுக்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பராமரிப்பு செய்து வந்த திருச்சி மாநகராட்சி, அடுத்த சில ஆண்டுகளில் பராமரிப்பில் அலட்சியம் காட்டியதால், அங்கு நடப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும் தண்ணீரின்றி கருகின. பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடங்கள், தகவல் மையம், கேன்டீன், யோகா மையம் ஆகியவை செயல்படாமல் பூட்டியே கிடக்கின்றன.
அங்கு கட்டப்பட்ட திறந்தவெளி அரங்கமும் பராமரிப்பின்றி முட்புதர்கள் சூழ்ந்து சிதிலமடைந்துள்ளது. திருச்சி மாநகர மக்கள் பலரின் பல லட்சம் ரூபாய் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா தற்போது கேட்பாரற்ற நிலையில் உள்ளது பொதுமக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இயன்முறை மருத்துவர் தமிழ்ச்செல்வி கூறுகையில், “2003-ல் திருச்சி மாநகரையே திரும்பிப் பார்க்க வைத்த பசுமை பூங்கா தற்போது கேட்பாரற்ற நிலையில், மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட உலக அதிசயங்களின் மாதிரிகள் எதுவும் இப்போது இங்கு இல்லை. இங்கிருந்த பிளாஸ்டிக் இருக்கைகளும் எரித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பஞ்சப்பூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவ்வப்போது அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், ஆய்வு செய்கின்றனர். அவர்கள் ஆய்வுக்கு செல்லும் வழியில் உள்ள இந்த பூங்காவை கண்டும் காணாமல் செல்வது வேதனை அளிக்கிறது.
இந்த பூங்காவை சீரமைத்து, வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரித்து, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, மீண்டும் ஆயிரக்கணக்கில் மரங்களை நட்டு பராமரித்தால், திருச்சி மக்களுக்கு இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும் என்றார்.
காய்கறி, பழங்கள் விற்பனை வளாகம் அமைக்க முடிவு: இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “நீண்டகாலமாக இந்த பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதால், அதில் உள்ள கட்டமைப்புகள் அனைத்தும் சிதிலமடைந்துவிட்டன. அதை மீண்டும் புதுப்பிக்க பல லட்சம் ரூபாய் செலவிட நேரிடும். எனவே பசுமை பூங்கா உள்ள இடத்தில் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள் விற்பனை வளாகம் (மார்க்கெட்) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT