

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறிந்து மூடப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.12) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தன் துறையின் கீழ் புதிய அறிப்புகளை வெளியிட்டார். அவற்றின் முக்கிய அம்சங்கள்:
தொகுப்பூதியம் உயர்வு: தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1,100/-ம், விற்பனையாளர்களுக்கு ரூ.930-ம், மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.840/-ம் மாதந்தோறும் கூடுதலாக உயர்த்தி 01.04.2023 முதல் வழங்கப்படும்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 31.03.2023 அன்றுள்ளபடி 5,329 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்.
வருவாய் எவ்வளவு? - 2022-2023-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி ஆகியவை மூலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கிறது.
2003-04-ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. இந்நிலையில், 20 ஆண்டுகளில் இந்த வருவாய் ரூ.44,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,050 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2022-23 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.8,000 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.