

சென்னை: ஜிபிஎஸ் வரைபடம் உதவியுடன் தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்களை தெரிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:
உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன்: ஆலங்குளம் பேரூராட்சியில் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?
முதல்வர் மு.க. ஸ்டாலின்: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு, ஆலங்குளம் வட்டம், குத்தப்பாஞ்சன் கிராமத்தில், புல எண்.209/5-ல் சுமார் 25 சென்ட் பரப்பளவுள்ள அரசுக்குச் சொந்தமான நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்முறை ஆணையின்படி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆலங்குளத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்குச் சொந்தமாக கட்டடம் கட்ட தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உறுப்பினர் பால்மனோஜ் பாண்டியன்: ஆலங்குளம் தொகுதியில் இரண்டு கிராமங்களில் உள்ள இடங்களில் ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் கட்டப்படுமா?
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கான இடங்களைக் குறிப்பிட்டு, அங்கே கட்டடம் கட்டப்படுமா? என்று வினாவை எழுப்பியுள்ளார். ஏற்கெனவே ஆலங்குளம் வட்டம், குத்தப்பாஞ்சன் கிராமத்தில், அரசுக்குச் சொந்தமான நிலம் தெரிவு செய்யப்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தினரிடமிருந்து 3 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அங்கே தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன்: கடையம் ஒன்றியத்தை மையமாக கொண்டு கடையம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் நடப்பாண்டில் அமைத்துத் தர வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தீ விபத்துகள் ஏற்படும் இடங்களுக்கு, தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் குறைவான நேரத்திற்குள், விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கக்கூடிய நம்முடைய அரசு, அறிவியல் பூர்வமாக உலகளாவிய நிலைப்படுத்துதல் அமைப்பு (GPS) வரைபடங்களின் உதவியுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களின் அமைவிடங்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை கொள்கை அளவில் மேற்கொண்டு வருகிறது.
பொதுவாக, ஓரிடத்தில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் தொடங்குவதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் 25 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வேறு ஒரு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டுமென்ற அளவுகோல் இருக்க்கூடிய நிலையில், மாண்புமிகு உறுப்பினர் கோரக்கூடிய கடையம் பகுதியைப் பொறுத்தவரையில், 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்திலும், 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்காசியிலும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் முழு அளவில் பணியாளர்களைக் கொண்டு சிறப்பாக தற்போது செயல்பட்டு வருகின்றன.
உறுப்பினர் குறிப்பிடக்கூடிய கடையம் பகுதியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 59 சிறிய அளவிலான தீ விபத்துக்கள் தான் நிகழ்ந்திருக்கின்றன. எனவே, கடையம் பகுதியில் தீ விபத்து ஏதேனும் நிகழ்ந்தால், அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் இயங்கிவரக்கூடிய தீயணைப்பு நிலையங்களைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு ஊர்திகளைக் கொண்டே மீட்புப் பணிகளை மேற்கொள்ள இயலும்.