

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணை திட்டங்களுக்கு ரூ.18,670 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டங்களை செயல்படுத்த தனிச்சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநிலஅளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னதமான நோக்கம் கொண்ட திராவிட மாடல் அரசாக நமது அரசுசெயல்பட்டு வருகிறது.
அனைத்து வளர்ச்சியும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதே இந்த அரசினுடைய நோக்கம், லட்சியம், பாதை. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர தனி அக்கறை செலுத்தி திட்டங்கள் தீட்டி வருகிறோம்.
தனி சட்டம் இயற்றப்படும்: புதிரை வண்ணார் நல வாரியத்துக்கு புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிதியாண்டில் ரூ.10 கோடி கூடுதல் நிதி ஒப்பளிப்புசெய்யப்பட்டுள்ளது. சிறப்புக் கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த, ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான ரூ.77,930 கோடியில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்துக்காக ரூ.17,075 கோடி மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்துக்காக ரூ.1,595 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. உரிய ஆலோசனைக்குப் பின்னர், அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதற்கான சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கல்வி புகட்டுதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், அதிகாரம் பொருந்திய பொறுப்புகளில் அமர வைத்தல், இடஒதுக்கீடுகள், பொருளாதார உதவிகள், மனைகள் தருதல், வீடுகள் வழங்குதல் இவை அனைத்தும் கண்ணும் கருத்துமாக கவனித்து வழங்கப்பட்டு வருகிறது.
இத்தோடு அரசின் கடமை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடுகளால், தொலைநோக்குப் பார்வையால், கண்காணிப்பால் மற்ற வளர்ச்சிகளை நாம் எட்டிவிடலாம். ஆனால் சமூக வளர்ச்சியும், சிந்தனை வளர்ச்சியும் அப்படிப்பட்டது அல்ல. அதுமக்கள் மனங்களில் உருவாக வேண்டும். மக்கள் மனதில் மனமாற்றங்கள் ஏற்பட வேண்டும். இது மிகச் சீக்கிரமாக ஏற்பட்டுவிடாது என்பது உண்மைதான்.
பல்லாயிரமாண்டு அழுக்கை சில பத்தாண்டுகளில் சரிசெய்திட முடியாது என்பது உண்மைதான். அதேநேரத்தில் சமூக வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சியை உருவாக்கும் நமது விழிப்புணர்வு பயணம் என்பது தொய்வில்லாமல் தொடர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீடுகளால், தொலைநோக்குப் பார்வை யால், கண்காணிப்பால் மற்ற வளர்ச்சிகளை நாம் எட்டிவிடலாம். ஆனால் சமூக வளர்ச்சியும், சிந்தனை வளர்ச்சியும் அப்படிப்பட்டது அல்ல. அது மக்கள் மனங்களில் உருவாக வேண்டும்.