

சிவகங்கை: சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் கிராபைட்டை கொள்முதல் செய்ய மறுத்து வருவதால் 1,000 டன் தேக்கமடைந்துள்ளது.
சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில் 1994 முதல் கிராபைட் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் சராசரியாக 16 முதல் 28 டன் வரை கிராபைட் தயாரிக்கப்படுகிறது. பென்சில், உராய்வுத் தடுப்பான்கள், தங்கம், இரும்பு போன்ற உலோகங்களை உருவாக்கும் உலை, ராக்கெட் மற்றும் விமானத்தில் பொருத்தப்படும் அதிக வெப்பத்தை தாங்கும் பொருட்களை தயாரிக்க கிராபைட் பயன்படுகிறது.
சிவகங்கை ஆலையிலிருந்து கிராபைட்டை சேலம், சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.
இந்த ஆண்டு 84 சதவீதம் முதல் 96 சதவீதம் வரையிலான தரத்தில் உள்ள கிராபைட்டை கொள்முதல் செய்ய 5 நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்துள்ளன. இந்நிலையில், கிராபைட் விலை கடந்த ஆண்டை விட 66 சதவீதம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களில் ஒன்று கிராபைட்டை கொள்முதல் செய்ய மறுத்துவிட்டது. விலையை குறைத்தால்தான் கொள்முதல் செய்வோம் என்று தெரிவித்துவிட்டது.
அந்நிறுவனம் கொள்முதல் செய்யாததால் 1,000 டன் கிராபைட் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.5 கோடி. இந்நிலை நீடித்தால் ஆலையை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, ஒப்பந்த நிறுவனத்துடன் பேச்சு நடத்தி இதற்கு தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஆலை தரப்பில் கேட்டபோது, அந்த ஒப்பந்த நிறுவனத்துடன் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினர்.