

திருப்பூர்: முதுமலை காடுகளை சுற்றிப்பார்த்தபோது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கேமோஃபிளாஜ் டீ-சர்ட் உடை திருப்பூரில் தயாரிக்கப்பட்டது.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு பிரதமர் மோடி, வாகனம் மூலம் சவாரி மேற்கொண்டு, இயற்கை அழகை ரசித்து வன விலங்குகளை பைனாகுலர் மூலம் பார்வையிட்டார். அவற்றை புகைப்படமும் எடுத்தார். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் சென்ற பிரதமர், தாயில்லாத குட்டி யானைகளை பராமரித்த, ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த தம்பதியான பொம்மன், பெள்ளி ஆகியோரை சந்தித்து பாராட்டினார்.
முதுமலையில் பிரதமர் மோடி அணிந்திருந்த கேமோஃபிளாஜ் டீ-சர்ட்(உருமறை ஆடை), திருப்பூரில் தயாரானது என்பதை தொழில்துறையினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பிரதமர் அணிந்திருந்த கேமோஃபிளாஜ் டீ-சர்ட் திருப்பூர் சென்னை சில்க்ஸ் குழுமத்தின் எஸ்.சி.எம். நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. ராணுவ வீரரைப் போன்ற பிரதமரின் புகைப்படங்கள், நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக எஸ்.சி.எம். நிறுவன நிர்வாக இயக்குநர் பரமசிவம் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக கேமோ டீ சர்ட் மற்றும் பேன்ட் உள்ளிட்ட ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறோம். 25 நாடுகளுக்கு மேல் ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம்.
இந்த ஆடைகள் நாடு முழுவதும் டெகத்லான் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகிறது. காடுகளில் வேட்டைக்கு செல்பவர்கள், சுற்றிப்பார்க்க செல்பவர்கள், டிரக்கிங் செல்பவர்கள் இதுபோன்ற ஆடைகளை வாங்கிச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த ஆடைகள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 சதவீதம் பருத்தியால் இந்த ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் முதுமலை பயணத்துக்காக பிரதமர் அலுவலக அதிகாரிகள் குழு, பெங்களூருவில் உள்ள டெகத்லான் ஷோரூமில் ஆடைகளை வாங்கியுள்ளனர். திருப்பூரில் தயாரான கேமோஃபிளாஜ் ஆடையை பிரதமர் அணிந்து வனத்துக்குள் சென்றபோது கம்பீரமாக காட்சியளித்தார். அவரது டீ-சர்ட் பலரையும் கவர்ந்துள்ளது. பின்னலாடை நகருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக அவரது ஆடை மாறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.