

சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக 6 கோடி ரூபாய் செலவில் 6 மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்று தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.11 ) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ELITE மற்றும் பன்னாட்டு அளவிலான பேட்டிகளில் பதக்கம் வெல்லும் MIMS ஆகிய திட்டங்களின் கீழ் வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும். இதன்படி ELITE திட்டத்தில் ஆண்டு நிதி உதவி ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும், பயனாளிகளின் எண்ணிக்கை 12லிருந்து 25 ஆக உயர்த்தப்படும். MIMS திட்டத்தில் ஆண்டு நிதி உதவி ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாகவும், பயனாளிகளின் எண்ணிக்கை 50லிருந்து 75 ஆக உயர்த்தப்படும்.
மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து ‘TN சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ அமைப்பதற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.