

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் - முக்கிய அம்சங்கள்: தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்த நிலையில், அச்சட்டம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் பணத்தையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதன்படி, ஆன்லைன் மூலம் நடைபெறும் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு சேவை வழங்கும் நிறுவனங்கள், இனி அந்த சேவையை வழங்க தடை விதிக்கப்படுகிறது.
எந்த நிறுவனமும், எந்த வகையிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் விளையாடுவோர் இடையே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வங்கிகள், பேமென்ட் வங்கிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
பணத்தை வைத்து ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றை விளையாடினால் 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அதேபோல, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஓராண்டு வரை சிறை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இதுபோன்ற சூதாட்டங்களில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள், அடுத்தடுத்து தண்டனை பெறும்போது ஓராண்டுக்குக் குறையாமல், 3 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தனி ஆணையத்தை அமைக்க வேண்டும். அந்த ஆணையத்தின் தலைவராக, அரசு தலைமைச் செயலருக்கு குறையாத பதவி வகித்து, ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும், காவல் துறை ஐ.ஜி., தகவல் தொழில்நுட்ப வல்லுநர், மனநல ஆலோசகர், ஆன்லைன் விளையாட்டில் அனுபவம் வாய்ந்த ஒருவர் ஆகியோரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகரிப்பு: இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்: தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், ‘தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் முகக்கவசம் அணிவது தொடர்பாக அரசின் நிலைபாடு குறித்து பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கிண்டி பன்னோக்கு மருத்துவமனை வரும் ஜூன் மாதம் திறக்கப்படும்’: சென்னை - கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மாநில கட்சி அங்கீகாரத்தை இழந்தது பாமக: இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2011 முதல் 2021 வரை நடைபெற்ற தேர்தலில் பாமக குறிப்பிட்ட சதவீத வாக்குகளோ, வெற்றிகளோ பெறாத காரணத்தால், புதுச்சேரியில் அக்கட்சியின் மாநில அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பள்ளிச் சிறுமிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த சிறுமி டானியா பள்ளி செல்லத் தொடங்கியதையொட்டி அச்சிறுமிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அன்புள்ள டானியாவுக்கு, பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாய் என்றறிந்தேன். மகிழ்ச்சி. ஆசிரியர்களோடு அன்பான நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸின் எதிர்ப்பை மீறி சச்சின் பைலைட் உண்ணாவிரதம்: ஊழக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், தனது சொந்த கட்சி அரசாங்கத்திற்கு எதிராக திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவரது இந்த செயல் கட்சி விரோத நடவடிக்கையாக பார்க்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. இந்த நிலையில், சச்சின் பைலட்டின் இந்த உண்ணாவிரதம் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களுக்கு விடப்பட்டுள்ள சவால் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்த அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவினை பிறப்பித்தது.
“இந்தியா நம்பர் 1 ஆக ஆம் ஆத்மியில் சேருங்கள்”- கேஜ்ரிவால்: ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சிக்கான அந்தஸ்து திங்கள்கிழமை கிடைத்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு வந்த அரவிந்த் கேஜ்ரிவால், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ''ஆம் ஆத்மி கட்சி இப்போது தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதை அடுத்து, நமக்கான பொறுப்பு அதிகரித்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி மீது நம்பிக்கை வைத்த, ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா நம்பர் ஒன் ஆவதற்கு நாட்டு மக்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
“மேற்கத்திய நாடுகளின் தவறான கண்ணோட்டம்”: இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்வதாகக் கருதுவது மேற்கத்திய நாடுகளின் தவறான கண்ணோட்டம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர், தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டு, அதன் தலைவர் ஆதம் எஸ் போசென் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது இதனைத் தெரிவித்தார்.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அவதி: கொடைக்கானலில் சீசன் தொடங்கிய நிலையில், ஆண்டு தோறும் அனுபவிக்கும் சிரமங்கள் இந்த ஆண்டும் தொடர்வதாக சுற்றுலா பயணிகள் வேதனையுடன் தெரிவிக் கின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக, அங்கு போக்குவரத்து நெரிசல் மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஒரு நாள் மட்டுமே சுற்றுலா வந்து செல்வோர் கொடைக்கானலை அரைகுறையாகப் பார்த்து விட்டு அதிருப்தியுடன் பாதியிலேயே திரும்பும் நிலைதான் உள்ளது. மேலும் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்தால், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் போதுமான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் செய்து தரப்படவில்லை. ஆகவே கூடுதல் கழிப்பறை களை ஏற்பாடு செய்து அவற்றை முறையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
மேலும், கொடைக்கானல் உணவகங்களில் உணவுகளின் விலைப் பட்டியலையே காண முடியவில்லை. இதை நகராட்சி சுகாதாரத் துறை கண்காணித்து, உணவகங் கள் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடு வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.