

கும்பகோணம்: கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு ஒருவரும், 28 பேர் பிற காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளுக்குச் செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும், அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று போன்ற பல்வேறு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என 85 படுக்கைகள், 5 எம்டி மருத்துவர்கள், 10 செவிலியர்கள், 5 தூய்மைப் பணியாளர்கள் தீவிரப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கும்பகோணம் மருத்துவமனையில், கரோனா பாதித்த ஒருவரும், பிற காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மற்ற 28 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறியது: "கடந்த 5 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த கொண்ட 20 வயதிற்குட்பட்ட ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தற்போது இங்குள்ள கரோனா தொற்று சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் 2 நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார். இதேபோல் பல்வேறு காய்ச்சலால் 29 பேர் சிகிச்சை பெற்று வருபவர்களும் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார்கள். தற்போது வரும் கரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவாகும்" எனத் தெரிவித்தனர்.