

சென்னை: தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் உட்பட பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, அதனால் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன. இதையடுத்து, கடந்த அதிமுகஆட்சியின் போது, சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இணையதள விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றன. இதையடுத்து, நீதிமன்றம் இச்சட்டத்தை ரத்து செய்ததுடன், புதிய சட்டம் கொண்டுவரலாம் என தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதன்பிறகு, அந்த அவசர சட்ட சோதாவுக்கு பதிலாக, அதில் உள்ள ஷரத்துகளில் எந்த மாற்றமும் செய்யாமல், சட்டப்பேரவையில் அக்.19-ம் தேதி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பிறகு, 131 நாட்கள் கழித்து, ஆளுநர் அந்த மசோதாவை கடந்த மார்ச் 6-ம்தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த சட்டம் மத்திய அரசுடன் தொடர்புடையது என்று கூறி, மாநில சட்டப்பேரவைக்கு இருக்கும் அதிகாரம் குறித்து ஆளுநர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 9-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த மசோதா தொடர்பாக விவாதிக்கப்பட்டு, மீண்டும் அதே மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பட்ஜெட் தாக்கலுக்காக சட்டப்பேரவை கடந்த மார்ச் 20-ம் தேதி மீண்டும் கூடியது. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் மசோதாவை முதல்வர் ஸ்டாலின் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்தார். அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் இந்த சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளே ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பேரவையால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, பேரவையில் முதல்வர் ஸ்டாலினால் நேற்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை ஒப்புதல் அளித்தார்.
இதன்பிறகு, சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ‘‘பேரவையில் இன்று காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர் தனித் தீர்மானத்தின் நல்விளைவாக, மாலையிலேயே ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். இந்த சட்டமானது உடனடியாக இன்றே அரசிதழில் வெளியிடப்படும்’’ என்றார். இதன்படி, தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது.