

சென்னை: பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷன் கல்லூரியில் ஒரு பேராசிரியர் உட்பட 4 பேர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அடையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரியும் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், டாக்டர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் அடங்கிய சுதந்திரமான விசாரணைக் குழுவை கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் அமைத்துள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடனக் கலைஞர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், நாத் ஆகியோர் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், காவல்துறை எஸ்.பி.மகேஸ்வரன், டிஎஸ்பிக்கள் குமார், சுந்தரேசன் ஆகியோர் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.