

சென்னை: இணையதள தாக்குதலை தடுக்க, மின்வாரியத்தில் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தின் துணை நிறுவனமான மின் பகிர்ந்தளிப்பு மைய கட்டுப்பாட்டு மையம், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ளது. இங்குள்ள பெரிய எல்இடி திரை மூலம், மாநிலத்தின் மின் பயன்பாடு, மின் தேவை, மின்னுற்பத்தி உள்ளிட்ட விவரங்களை பொறியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நாடு முழுவதும் அனைத்து அரசு நிறுவனங்களின் கணினி சர்வரில் உள்ள விவரங்களை இணையவழி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ‘கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் இந்தியா’ என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மாநில மின் பகிர்ந்தளிப்பு மையங்களிலும் இணையதள தாக்குதலை தடுக்க தனி பிரிவை தொடங்குமாறு இந்தஅமைப்பு அறிவுறுத்தியது. இதைஏற்று, ‘இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி டிவிஷன்’ என்ற தனி பிரிவை தமிழ்நாடு மின்வாரியத்தின் மாநில மின்பகிர்ந்தளிப்பு மையம் தொடங்கியுள்ளது. இந்த பிரிவு தலா ஒரு செயற்பொறியாளர், உதவிசெயற்பொறியாளர், 8 உதவி பொறியாளர்களுடன் 24 மணி நேரமும் செயல்படும்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியபோது, ‘‘பகிர்ந்தளிப்பு மையங்கள் மின்தேவையை கணக்கிட்டு, அதற்கேற்ப மின்னுற்பத்தி, மின்கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், இணையதள தாக்குதல் நடைபெற்றால், நிர்வாக மேலாண்மையில் சிரமம் ஏற்படும். இதை தடுக்க பகிர்ந்தளிப்பு மையத்துக்கு இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி பிரிவும், மின்தொடரமைப்பு கழகத்துக்கு செக்யூரிட்டி ஆபரேஷன் சென்டர் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இணையதள தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும்’’ என்றனர்.