

சென்னை: ரூ.20.13 கோடியில் 12 புதிய மற்றும் 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீயணைப்புத் துறை சார்பில், சேலம் - ஆட்டையாம்பட்டி, திருப்பூர் - ஊத்துக்குளி, சிவகங்கை - இளையான்குடி, திருச்சிராப்பள்ளி – வையம்பட்டி, கடலூர் – குமராட்சி, கள்ளக்குறிச்சி – நயினார்பாளையம், விழுப்புரம் – அன்னியூர், மதுரை – திருப்பரங்குன்றம், விருதுநகர் – ஏழாயிரம்பண்ணை, சென்னை – கொளத்தூர், செங்கல்பட்டு – காலவாக்கம், திருவண்ணாமலை – கண்ணமங்கலம் ஆகிய 12 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் விருதுநகர் – சிவகாசி, ராணிப்பேட்டை – ராணிப்பேட்டை, செங்கல்பட்டு – தாம்பரம், கிருஷ்ணகிரி – ஓசூர் ஆகிய 4 தீயணைப்பு நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.20.13 கோடி மதிப்பிலான தீயணைப்பு நிலையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காணோலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
மீட்பு இழுவை, ரோந்து வாகனம்: கடந்த 2022-23-ம் ஆண்டு காவல் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டுக்காக ரூ.2 கோடி மதிப்பில் 10 மீட்பு இழுவை வாகனங்கள், ரூ.67 லட்சம் மதிப்பில் 4 கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவைகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தீயணைப்புத் துறை இயக்குநர் அபாஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.