

திருப்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் கமலேஷ் (28), சச்சின்ராம் (21). இருவரும் நண்பர்கள். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் சிட்கோ செந்தில் நகரில் வாடகை வீட்டில் இருவரும் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் வார விடுமுறை என்பதால், வீட்டில் இருந்த துணிகளை துவைத்து அங்குள்ள கம்பியில் கமலேஷ் போட்டார். எதிர்பாராதவிதமாக கமலேஷ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அப்போது அவரை காப்பாற்ற முயன்ற சச்சின்ராம் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் 2 பேரும் உயிரிழந்தனர். இருவரின் சடலங்களையும் மீட்ட ஊத்துக்குளி போலீஸார், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஊத்துக்குளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.