

சென்னை: சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். ரூ.80 கோடியில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. பின்னர் அத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்பில் இடம்பெற்றிருப்பதாவது:
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்பு பணிகள் ரூ.80 கோடியில் உலகத்தரத்தில் மேற்கொள்ளப்படும். டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோரின் சிறப்புகள், பெருமைகளை எதிர்காலத் தலைமுறையினர் அறியும் வகையில் திராவிட இயக்க சரித்திர நிகழ்வுகளை தாங்கி ஒரு வரலாற்று சின்னம் அமையும் அளவுக்கு ‘திராவிட இயக்க தீரர்கள் கோட்டம்’ தலைநகர் சென்னையில் அமைக்கப்படும்.
சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் அதிநவீன படப்பிடிப்பு தளங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் மட்டும் உள்ளது. பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் இந்த வசதி சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகங்களில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சரின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.