சேலத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதியின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு: ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும் புகார்

கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி. உடன் உறவினர்கள். படம்: எஸ்.குரு பிரசாத்
கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி. உடன் உறவினர்கள். படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

சேலம்: சேலத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதியை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் டிஆர்ஓ மேனகா தலைமையில் நேற்று நடந்தது. இதில், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் - ஜானகி தம்பதி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

மலைவாழ் இனத்தைச் சேர்ந்த நான் (ஜானகி), வேறு சமூகத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்து கொண்டு, வீரபாண்டியில் வசித்து வருகிறேன். எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். வீரபாண்டி அருகே உள்ள அரசம்பாளையம் ஊர் தர்மகர்த்தாக்கள் எங்கள் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர்.

இதுகுறித்து வீரபாண்டி ஊராட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், எந்த கோயிலுக்கும் செல்லக்கூடாது, எந்த வீட்டுக்கும் செல்லக்கூடாது, யாரையும் சந்திக்கக் கூடாது எனக் கூறி எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டனர்.

எங்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்த வீட்டின் உரிமையாளரையும் ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் அந்தப் பகுதியில் எந்த பொருளும் வாங்க முடியாமலும், வாழ முடியாமலும் உள்ளோம். இதுகுறித்து தர்மகர்த்தாவிடம் கேட்டபோது, சாதி பெயரைக் கூறி இழிவாக பேசி மிரட்டினார்.

இதுசம்பந்தமாக ஆட்டையாம்பட்டி போலீஸில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுத்து, எங்களை ஊருடன் சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும். எங்களை இழிவாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in